சிங்கப்பூரில் மழையில் திடீரென 180 டிகிரி திரும்பிய லாரி..!டாஷ்கேமராவில் சிக்கிய அதிர்ச்சிக் காட்சி!

சிங்கப்பூரில் மழையில் திடீரென 180 டிகிரி திரும்பிய லாரி..!டாஷ்கேமராவில் சிக்கிய அதிர்ச்சிக் காட்சி!

சிங்கப்பூரின் மத்திய வர்த்தகப் பகுதியில் (Central Business District) மழையில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று திடீரென 180 டிகிரி திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 16ஆம் தேதி மாலை சுமார் 5:45 மணியளவில், கோலியர் குவே (Collyer Quay) பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அப்போது வெள்ளி நிறத்திலான சிறிய லாரி ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அந்த நேரத்தில், பிரதிபலிப்பு பாதுகாப்பு உடை அணிந்திருந்த கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

இதனால், அவரைத் தவிர்ப்பதற்காக லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவிலேயே சுமார் 180 டிகிரி அளவுக்குத் திரும்பியது. இதனால் லாரியின் முன்பகுதி எதிர்த்திசையை நோக்கித் திரும்பியது.

இந்தக் காட்சிகள் அப்பகுதியில் சென்ற வாகனத்தின் டாஷ்கேமராவில் பதிவாகியுள்ளன. பின்னர் அந்தக் காணொளி Facebook-இல் உள்ள ROADS.sg பக்கத்தில் பகிரப்பட்டது.

சம்பவத்தின்போது சாலையின் இடதுபுறத்தில் சில கட்டுமான லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதிர்ஷ்டவசமாக, லாரி திடீரெனத் திரும்பிய நேரத்தில் அருகில் வேறு வாகனங்கள் எதுவும் நெருங்கி வரவில்லை.

அதேபோல், பின்னால் வந்த Grab டாக்ஸியும் காணொளியைப் பதிவு செய்த வாகனமும் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இணையவாசிகள் கருத்து தெரிவிக்கையில், மழைக்காலங்களில் சாலையில் பார்வைத்திறன் குறைவாக இருக்கும் என்பதால், சாலையைக் கடக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், வாகன ஓட்டுநர்களும் வேகத்தைக் குறைத்து எச்சரிக்கையுடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.