சிங்கப்பூரில் S$590,000 கொள்ளை முயற்சி..!! பெண்ணைத் தாக்கிய 38 வயது ஆடவர் மீது வழக்கு!

சிங்கப்பூரில் S$590,000 கொள்ளை முயற்சி..!! பெண்ணைத் தாக்கிய 38 வயது ஆடவர் மீது வழக்கு!

சிங்கப்பூரின் ஹவ்காங் (Hougang) பகுதியில் பெண் ஒருவரிடம் இருந்து 5.9 லட்சம் வெள்ளி பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றபோது, அவரைக் கடுமையாகத் தாக்கியதாக 38 வயது ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த நவம்பர் 17ஆம் தேதி அதிகாலை சுமார் 2:20 மணியளவில், ஹவ்காங் பகுதியில் உள்ள ஜாலான் தெலிட்டி (Jalan Teliti) சாலையில் அமைந்துள்ள ஒரு தனி வீட்டில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின்போது 44 வயதுடைய பெண் ஒருவரிடம் இருந்த 5.9 லட்சம் வெள்ளி ரொக்கப் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண்ணைத் தாக்கியதில் அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அவரது இடது கண்ணிலும் பாதிப்பு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 38 வயதான Lariosa Cris Chan என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது நவம்பர் 18ஆம் தேதி, கொள்ளை முயற்சியின்போது கடுமையான காயம் ஏற்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிங்கப்பூர் குற்றவியல் சட்டத்தின் 394ஆவது பிரிவின்படி, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

இதற்கிடையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவரை மேலதிக விசாரணைக்காக உட்லண்ட்ஸ் காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வரும் நவம்பர் 25ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் இடையிலான தொடர்பு மற்றும் பெண்ணின் தற்போதைய உடல்நிலை குறித்த முழுமையான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.