காகங்களுக்காக சட்டத்தை மீறினாரா..? இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தோ பாயோ பகுதியில் காகங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தேசிய பூங்கா வாரியம் அமைத்திருந்த பொறிகளை 77 வயது முதியவர் ஒருவர் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் பொறிகளில் சிக்கியிருந்த காகங்கள் தப்பிச் சென்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக, அரசு நிறுவனத்தின் செயல்பாட்டைத் தடுக்க முயன்ற காரணத்திற்காக இன்று (16.12.25) அவர் மீது குற்றம் சாட்டப்பட உள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி மாலை 6:15 மணியளவில், லோரோங் 4 தோ பாயோவில் பிளாக் 181 அருகேயுள்ள புல்வெளியில் காகப் பொறிகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட கேபிள் டை அறுக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.