வேகவரம்பை மீறியதால் நடந்த பயங்கர விபத்து..!! நீதிமன்றம் எடுத்த கடும் நடவடிக்கை..!!!

வேகவரம்பை மீறியதால் நடந்த பயங்கர விபத்து..!! நீதிமன்றம் எடுத்த கடும் நடவடிக்கை..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் லாரியில் பயணித்திருந்த ஒன்பது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய வழக்கில்,ஒருவருக்கு 27 மாதங்கள் சிறைத்தண்டனையும்,எட்டு ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2023 ஜூலை 19 ஆம் தேதி காலை 7.45 மணியளவில் கேலாங் பயோ லெபார் விரைவுச்சாலையில் (KPE) நடந்துள்ளது. அப்போது டான் வெய் ஃபெங் என்பவர் வாடகைக்கு எடுத்த காரை மணிக்கு 130 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட 80 கிலோமீட்டர் வேகத்தை விட பல மடங்கு அதிகமாகும்.

மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது அவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், இதனால் வெளிநாட்டு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதி, லாரி கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பலர் லாரியிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.இந்த விபத்தில் மொத்தம் 12 பேர் காயமடைந்தனர். இதில் ஒன்பது இந்திய தொழிலாளர்கள் தலை, முதுகெலும்பு, முகம் மற்றும் விலா எலும்புகளில் கடுமையான காயங்களை சந்தித்தனர்.அவர்களில் நான்கு பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.

மேலும் காயமடைந்தவர்களில் லாரி ஓட்டுநர், முன்பக்க இருக்கையில் இருந்த வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் மற்றும் பிரதிவாதியின் 26 வயது பெண் பயணியும் அடங்குவர்.

விபத்தில் சம்பந்தப்பட்ட வாடகை கார் மற்றும் லாரி இரண்டும் கடுமையாக சேதமடைந்ததாகவும், மொத்த பழுது பார்ப்புச் செலவு S$44,000 சிங்கப்பூர் டாலர்களை தாண்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.

அரசு தரப்பு வாதத்தில், பிரதிவாதி விபத்து நடந்த நாளில் மிகுந்த பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாகவும்,அதீத வேகம் மட்டுமின்றி, பல முறை சட்டவிரோதமாக பாதைகளை மாற்றியதாகவும்,பாதுகாப்பான பின்தொடர்தல் தூரத்தை பின்பற்றத் தவறியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விபத்து தீவிரமானது மற்றும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியதாகவும் அரசு தரப்பு தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த பிரதிவாதி, சம்பவத்தின் போது மது அல்லது போதைப்பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்றும், வயதான தாயாரை கவனித்துக் கொண்டிருந்ததாகவும், தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகவும் கூறி, தண்டனையில் தளர்வு கோரினார்.

ஆனால், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வாகனம் ஓட்டும்போது கவனக்குறைவாக நடந்துகொண்டதற்காக அவருக்கு ஏற்கனவே அபராதம் அல்லது எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தது என்பதும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK