சிங்கப்பூரில் வரி தாக்கல் செய்யும் முறையில் பெரிய மாற்றம்..!!!

சிங்கப்பூரில் வரி தாக்கல் செய்யும் முறையில் பெரிய மாற்றம்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தானியங்கி சேர்க்கை திட்டத்தில் (AIS) தற்போது 1 லட்சத்து 23 ஆயிரம் முதலாளிகள் பங்கேற்றுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் துறை (IRAS) தெரிவித்துள்ளது. இதன் மூலம், 2026 வரி ஆண்டில் 20 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் இனி தங்களே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய அவசியமின்றி, தங்களின் வரி விவரங்களை சரிபார்ப்பது மட்டும் போதுமானதாக இருக்கும்.

AIS திட்டத்தின் கீழ், முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் 2025 வருமான விவரங்களை 2026 மார்ச் 1க்குள் மின்னணு முறையில் IRAS-க்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தேவை, ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், AIS திட்டத்தில் ஏற்கனவே பங்கேற்கும் அனைத்து முதலாளிகளுக்கும் பொருந்தும்.

இந்த ஆண்டு மட்டும் 11,000க்கும் மேற்பட்ட புதிய முதலாளிகள் AIS திட்டத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் முதன்முறையாக ஊழியர் வருமானத் தகவல்களை IRAS-க்கு சமர்ப்பிக்க உள்ளனர். திட்ட விதிகளை விளக்கும் அறிவிப்பு கடிதங்கள் ஜனவரி மாதத்திலேயே அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதலாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்த IRAS, AIS டிஜிட்டல் சேவைகளில் பல மாற்றங்களை செய்துள்ளது. முந்தைய ஆண்டுகளுக்கான தாக்கல் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு ஆண்டுகள் வரை வருமானத் தரவை சமர்ப்பிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தரவு முன் நிரப்புதல் மற்றும் திருத்தங்களை எளிதாக்கும் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு 12,000க்கும் மேற்பட்ட முதலாளிகள் AIS தாக்கல் காலக்கெடுவைத் தவறவிட்டதால், 1.6 லட்சம் ஊழியர்களுக்கு தாமதமான அல்லது தவறான வரி மதிப்பீடுகள் ஏற்பட்டன. மார்ச் 1க்குள் வருமான விவரங்களை தாக்கல் செய்யத் தவறும் முதலாளிகளுக்கு S$5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் மீண்டும் விதிமீறும் நிறுவனங்களுக்கு கூடுதல் அபராதங்களும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

முதலாளிகள் சமர்ப்பிக்கும் தகவல்கள் தெளிவானதாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தவறான வருமானத் தகவல்கள் சமர்ப்பிப்பது சட்டவிரோதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் வரி ஏய்ப்பு தொகையின் இரு மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அபராதங்களைத் தவிர்க்க, முதலாளிகள் ‘தன்னார்வ வெளிப்படுத்தல் திட்டத்தின்’ கீழ் முன்கூட்டியே பிழைகளை தெரிவிக்குமாறு IRAS கேட்டுக்கொண்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK