சிங்கப்பூரில் சட்டவிரோதமாக ஓட்டுநர் பயிற்சி வழங்கிய நபருக்குச் சிறை..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்றுவிப்பாளர் ஒருவர் உரிமம் காலாவதியான நிலையிலும் அதை புதுப்பிக்காமல் சட்டவிரோதமாக பயிற்சி வழங்கிய 67 வயது நபருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது.
டான் டெங் ஹாக் என்ற நபர் டிசம்பர் 2023 முதல் மார்ச் 2025 வரை சுமார் 110 முதல் 130 மாணவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு S$60 முதல் S$70 வரை கட்டணம் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வெளியான தகவலின்படி, பிரதிவாதியின் ஓட்டுநர் பயிற்றுவிப்பாளர் உரிமம் மார்ச் 2001 இல் காலாவதியானது. கூடுதல் வருமானம் ஈட்டும் நோக்கில், செல்லுபடியாகும் உரிமம் கொண்ட நண்பருடன் ஒப்பந்தம் செய்து,மாணவர்களை ஏமாற்றியுள்ளார்.
டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை, செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் 70 முதல் 80 மாணவர்களுக்கு அவர் பயிற்சி வழங்கியதாக விசாரணையில் தெரியவந்தது. உரிய பதிவுகள் இல்லாததால், அனைத்து மாணவர்களையும் அதிகாரிகள் அடையாளம் காண முடியவில்லை.
ஏப்ரல் 2024 மற்றும் மார்ச் 2025 ஆகிய காலகட்டங்களில் நடந்த இரு சோதனைகளில், ஓட்டுநர் பயிற்சி நடைபெறும்போது விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதும், பிரதிவாதியிடம் செல்லுபடியாகும் உரிமம் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு நேற்று(05.02.25)வழங்கப்பட்ட தீர்ப்பில்,ஐந்து வார சிறைத்தண்டனை, S$1,000அபராதம் மற்றும் 24 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க தகுதி நீக்கம் ஆகியவை விதிக்கப்பட்டன.