சிங்கப்பூர்:ஆர்மீனியன் தெரு பகுதியில் மார்ச் 13 முதல் 15 வரை பெரனாக்கன் பெருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வு, இவ்வாண்டு பெரனாக்கன் ஒன்றுகூடல் என்ற கருப்பொருளுடன் மக்களை வரவேற்கிறது. பெரனாக்கன் சமூகத்தின் பாரம்பரியத்தைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும்.
பெரனாக்கன் அரும்பொருளகம் ஏற்பாடு செய்யும் இந்த விழா,பெரனாக்கன் சமூகத்தின் கலாசாரம் மற்றும் வரலாற்றை வெளிப்படுத்தும் முக்கியமான நிகழ்வாக திகழ்கிறது.அவர்களின் வாழ்வியல் முறைகள் மற்றும் கலைநயங்கள் பல்வேறு வடிவங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மக்கள் கலந்துகொள்ளலாம். இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலம் பெரனாக்கன் பாரம்பரியம் உயிரோட்டத்துடன் பார்வையாளர்கள் முன் கொண்டு வரப்படுகிறது.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கலைப்பணிகள் மற்றும் சிறப்பு புகைப்பட இடங்கள் குடும்பங்களையும் இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இவை விழாவுக்கு வண்ணமயமான தோற்றத்தை அளிக்கின்றன.
பெரனாக்கன் இனிப்புகள் மற்றும் பல்வேறு உள்ளூர் உணவுகள் பார்வையாளர்களுக்காக தயாராக உள்ளன.கைவினைப் பொருட்கள் உருவாக்கும் செயல்பாடுகளிலும் மக்கள் பங்கேற்று அனுபவிக்கலாம்.
இந்நிகழ்வை பல சமூக அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. பெரும்பாலான நிகழ்ச்சிகளில் மக்கள் கட்டணமின்றி கலந்துகொள்ளலாம். மேலும், பெரனாக்கன் அரும்பொருளகத்தில் நடைபெறும் “மயிலின் வலிமை: கலாசாரங்களைத் தாண்டிய அழகியலும் சின்னங்களும்” என்ற சிறப்புக் கண்காட்சிக்குச் செல்ல சலுகைகளும் வழங்கப்படுகின்றன.