சிங்கப்பூரில் சிகரெட் கட்டுப்பாடு வெற்றி பெற்றதா..?
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் கைப்பற்றப்பட்ட கள்ள சிகரெட்டுகளின் எண்ணிக்கை,கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய அதே நிலையில் உள்ளதாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
சுங்கத்துறை வெளியிட்ட தகவலின்படி,2025 ஜனவரி முதல் நவம்பர் வரை தீர்வை செலுத்தப்படாத 3.24 மில்லியன் சிகரெட் அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 3.26 மில்லியனாக இருந்தது. மேலும், 2020 முதல் 2022 வரை பிடிபட்ட கள்ள சிகரெட் அட்டைப்பெட்டிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட அளவு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் அதிகமாக இருப்பதாக சுங்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோத புகையிலைப் பொருட்கள் காரணமாக ஆசியான் நாடுகளின் அரசாங்கங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படுவதாக ஐரோப்பிய ஒன்றிய–ஆசியான் வர்த்தக மன்றத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ் ஹம்ரி தெரிவித்துள்ளார்.இதனைத் தடுப்பதற்காக ஆசியான் உறுப்பு நாடுகள் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அபராதங்கள் மூலம் ஓரளவு கட்டுப்பாடு ஏற்படினாலும், அவை மட்டுமே இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அமையாது என்றும் அவர் கூறினார்.