சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் கேட்லெஸ் மின்னணு சுங்க வசூல் முறையான ERP 2.0-க்கு முழுமையாக மாறுகிறது. இதன் கீழ், சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் சாலையில் பயணிக்க முன் ஆன்-போர்டு யூனிட் (OBU) கட்டாயமாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
1998 முதல் பயன்படுத்தப்பட்ட பழைய ERP அமைப்பு காலாவதியான தொழில்நுட்பம் காரணமாக நீடிக்க முடியாத நிலையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதனை மாற்ற 2013-லேயே முடிவு எடுக்கப்பட்டு, தற்போது ERP 2.0 செயல்பாட்டுக்கு தயாராகியுள்ளது.
இதுவரை 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் ஸ்மார்ட் ஓட்டுநர் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. பார்க்கிங் தகவல்கள், வேக வரம்பு நினைவூட்டல்கள் மற்றும் சாலை எச்சரிக்கைகள் போன்ற வசதிகள் வாகன உரிமையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
OBU இன்னும் நிறுவாத வாகன உரிமையாளர்களுக்கு இறுதி நினைவூட்டல் அனுப்பப்படும். அறிவிப்பு கிடைத்த பின் மூன்று மாதங்கள் இலவசமாக நிறுவ வாய்ப்பு வழங்கப்படும்.அதன் பின்னர் நிறுவுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
OBU இல்லாமல் வாகனம் இயக்குவது அல்லது சாதனத்தை சேதப்படுத்துவது சட்டவிரோதம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இம்மாதிரியான குற்றங்களுக்கு S$20,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.