சிங்கப்பூரில் பெண் பயணியிடம் தகாத பேச்சு..!! Gojek ஓட்டுநர் மீது LTA அதிரடி விசாரணை..!!
சிங்கப்பூர்: அதிகாலையில் தனியார் வாடகை காரில் பயணம் செய்தபோது தன்னிடம் கார் ஓட்டுநர் ஆபாசமான விஷயங்களைப் பற்றி பேசியது குறித்து பெண் பயணி ஒருவர் இணையத்தில் புகார் அளித்துள்ளார்.
வியாழக்கிழமை (ஜூலை 9) அதிகாலை சுமார் 1:00 மணி அளவில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது.
பெண் பயணி ஒருவர் ஓட்டுநரின் தொல்லை தரும் பேச்சுக்களைப் படம்பிடித்து அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ ஆனது வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்த சம்பவத்தை தனியார் வாடகை கார் நிறுவனம் உறுதி செய்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநரை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA), Gojek நிறுவனத்தின் கீழ் இயங்கும் தனியார் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் பெண் பயணிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இச்சம்பவம் குறித்த LTA நேற்று (ஜூலை 10) மாலை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது .
தொழில்முறை ஓட்டுநர் உரிமம் (Vocational Licence) வைத்திருப்பவர்கள் பொதுமக்களிடம் தவறாக நடந்து கொண்டால் அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள இயலாது என LTA நினைவூட்டி உள்ளது.
தற்போது நடந்து வரும் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது தகுந்த ஒழுங்குமுறை சட்ட நடவடிக்கைகள் பாயும் எனவும் ஆணையம் எச்சரித்துள்ளது.
பயணிகளிடம் பாலியல் ரீதியாக தவறான எண்ணத்துடன் பேசுவதோ அல்லது அத்துமிறலில் ஈடுபடுவதோ கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், Gojek போன்ற தனியார் நிறுவனங்களும் தங்கள் தளங்களில் உள்ள ஓட்டுநர்கள் மீது தனியாக உள்நாட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.