விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்..!! சாங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் முனையங்களுக்கு அப்பால்(Remote Stands) தொலைதூரத்தில் நிறுத்தப்படும் விமானங்களில் பயணிப்போரின் வசதிக்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய இரண்டு அடுக்கு ‘சேட்டிலைட் கேட்’ (Satellite Gate) கட்டிடம் அமைக்கப்பட உள்ளது.
சாங்கி விமான நிலையக் குழுமம் (CAG) இதுகுறித்து நேற்று (ஜூலை 10) தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய வசதி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
வழக்கமாக முனையங்களுக்கு வெளியே தூரமாக நிறுத்தப்படும் விமானங்களில் ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ பயணிகள் வெயில், மழையில் திறந்த வெளியில் நடந்து சென்று பேருந்து ஏற வேண்டி இருக்கும்.
அதை தவிர்த்து, பயணிகள் முழுமையான தங்கு தடையற்ற மற்றும் வசதியானப் பயணத்தை மேற்கொள்ள இந்த புதிய வசதி உதவும்.
ஒரு டென்னிஸ் மைதான அளவிலான இந்த புதிய இரு அடுக்கு கட்டிடத்தில் விமானங்களுடன் நேரடியாக இணையும் 2 ஏரோபிரிட்ஜ்கள் (Aerobridges/ இணைப்பு பாலங்கள்) மற்றும் தரைத்தளத்திற்கு செல்ல 60 மீட்டர் நீளமுள்ள சாய்வுப் பாதை (Ramp) அமைக்கப்பட்டுள்ளன.
முனையத்தில் இருந்து பயணிகள் வழக்கம் போல பேருந்து மூலம் இந்த சேட்டிலைட் கட்டிடத்திற்கு அழைத்து வரப்படுவார்கள். ஆனால் அங்கு வந்தவுடன் படிக்கட்டுகளில் ஏறாமல் முழுமையாகக் கூரையிடப்பட்ட குளிர்சாதனப் பகுதி வழியாக நேராக விமானத்திற்குள் செல்ல முடியும். இது சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் மற்றும் முதியவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
ஏர்பஸ் A380 மற்றும் போயிங் 747 ஆகிய இரு மிகப்பெரிய ரகங்களைத் தவிர, சாங்கி விமான நிலையத்திற்கு வரும் மற்ற அனைத்து வணிக முறை விமானங்களும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
ஆரம்பத்தில் ஸ்கூட் (Scoot), சியாமென் ஏர்லைன்ஸ் (Xiamen Airlines), ஏர்கேலின் (Aircalin)ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் இதனைப் பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் தளத்தின் கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி தகடுகள் (Solar Panels) மூலமே இதற்கு தேவையான மின்சார முழுமையாக பெறப்படுகிறது.
மேலும் விமானப் பயன்பாட்டு நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு மட்டுமே தானியங்கி முறையில் குளிர்சாதன வசதி செயல்படும் வகையில் ‘ஸ்மார்ட்’ தொழில்நுட்பம் இதில் புகுத்தப்பட்டுள்ளது.