சிங்கப்பூரில் $13 மில்லியன் பணம் முடக்கம்..!! சம்லிட் நிறுவனம் மீது வழக்கு..!!
சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் இயங்கி வந்த சம்லிட் பணப் பரிமாற்ற நிறுவனம் (Samlit Moneychanger) வழியாக சீனாவுக்கு அனுப்பப்பட்ட பணம் அங்குள்ள வாடிக்கையாளர்களைச் சென்றடையாத விவகாரத்தில், நிறுவன மேலாளர் மற்றும் இயக்குநர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சீன அதிகாரிகள் அங்குள்ள அந்நிறுவனத்தின் அலுவலக நிதிகளை முடக்கி வைத்துள்ளதால் பயனாளிகளால் பணத்தைப் பெற முடியவில்லை.
சம்லிட் நிறுவனம் மூலம் சீனாவுக்கு அனுப்பப்பட்ட சுமார் $13 மில்லியன் நிதி சீன அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அளித்த புகார்களை விசாரிக்குமாறு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) உத்தரவிட்டும், நிறுவனம் அதைச் செய்யத் தவறிவிட்டது.
சம்லிட் நிர்வாக மேலாளராக இந்தியர் மாலிக் சமீர் (வயது 36) மற்றும் அதன் இயக்குநரான சிங்கப்பூரர் நொவியாந்தி (வயது 45) ஆகிய இருவர் மீதும் ஜூலை 9ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நிதிச் சேவைகள் மற்றும் சந்தைகள் சட்டத்தின் கீழ், சம்லிட் நிறுவனம், நொவியாந்தி மற்றும் மாலிக் ஆகியோர் மீது தலா 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்காதது மற்றும் கணினிகளை அணுக்க அனுமதி தராதது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மாலிக் சமீர் மீது மொத்தம் 39 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) மற்றும் காவல்துறை இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையானது வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.