“புதுப்பிப்பு மட்டும் போதாது போட்டித்தன்மையும் வேண்டும்!” – பிரதமர் வோங்
புதுப்பிப்பு மட்டும் போதாது போட்டித்தன்மையும் வேண்டும்
சிங்கப்பூர்: உலகில் நடக்கும் பொருளாதார மற்றும் அரசியல் குழப்பங்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தைக் கூறிய சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், “அமெரிக்கா போன்ற நாடுகள் சர்வதேச ஒழுங்கை பின்பற்ற மறுக்கும் போக்கை தொடருமானால், உலகம் மேலும் குழப்பமடையக்கூடும்” என எச்சரித்தார்.
சிங்கப்பூர் கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்ற அவர், “நம் நாடு, மற்ற நாடுகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இல்லை. நமக்கான சிறந்த பாதையை நாம் உருவாக்க வேண்டும். இதற்காக, நமது பொருளாதார உத்திகளை புதுப்பிக்க வேண்டும். போட்டித்தன்மையையும், நன்மைகளையும் மேம்படுத்த வேண்டும்” என்றார்.
“நாம் நியூயார்க், பாரிஸ் போன்று மாற முடியாது. ஆனால் நம் தனித்துவமான வாழ்க்கை முறையை உருவாக்க முடியும். நாங்கள் நம்பகத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் கணிக்கக்கூடிய சூழலை வழங்கவேண்டும். இது தான் மற்ற நாடுகள் விரும்பும் மற்றும் நம்முடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கும் தரத்தை உருவாக்கும் வழி” என்றார்.
மேலும், “சிங்கப்பூர் திறந்தநிலை அடிப்படையில் செயல்பட வேண்டும். பிராந்திய மற்றும் உலக நாடுகளுடன் உறவை வலுப்படுத்தி, பன்முகத்தன்மையை நிலைநிறுத்த ஒரே வழி இதுதான். எரிசக்தி, நிலையான வளர்ச்சி ஆகிய துறைகளில் முன்னேற நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.