எட்டோமிடேட் போதையில் கார் ஓட்டிய நபர்..!! விபத்தில் பெண் பலி..7 குற்றச்சாட்டுகள் பதிவு..!

எட்டோமிடேட் போதையில் கார் ஓட்டிய நபர்..!! விபத்தில் பெண் பலி..7 குற்றச்சாட்டுகள் பதிவு..!

சிங்கப்பூரில் எட்டோமிடேட் (Etomidate) கலந்த மின்-சிகரெட்டை பயன்படுத்திய நிலையில், உரிமம் இல்லாமல் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக 41 வயது நபர் மீது இன்று (செப்டம்பர் 2) 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு (2025) ஜூலை 11-ஆம் தேதி இரவு சுமார் 11.45 மணியளவில், பிபிட் ரோடு (Pipit Road) பகுதியில் உள்ள புளோக் 52A அருகே நடந்துள்ளது.

காவல்துறையின் விசாரணையின்படி, சம்பவத்துக்கு முன்பு அந்த நபர்ர் எட்டோமிடேட் கலந்த மின்-சிகரெட்டை பயன்படுத்தியதாகவும், ஓட்டுநர் உரிமம் இல்லாத நிலையில் காரை ஓட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் கட்டுப்பாட்டை இழந்து, வாகன நிறுத்துமிடத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு இரண்டு பாதைகளைக் கடந்து சாலையோர நடைபாதையில் ஏறியுள்ளது. பின்னர் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக இரவு சந்தை கடை மீது கார் மோதியது.

அப்போது கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த 66 வயது பெண் விற்பனையாளர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்துக்குப் பிறகு அந்த நபர், காயமடைந்த பெண்ணுக்கு உதவாமல் காரை அங்கேயே விட்டுவிட்டு, காரில் இருந்த மற்றொரு ஆடவருடன் சேர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விரிவான விசாரணை மற்றும் காவல்துறையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் உதவியுடன் சந்தேகநபரின் அடையாளம் கண்டறியப்பட்டு, மறுநாள் ஜூலை 12-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது போதைப்பொருள் தாக்கத்தின் கீழ் வாகனம் ஓட்டியது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி ஒருவரின் மரணத்திற்கு காரணமானது, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, காப்பீடு இல்லாத வாகனத்தை ஓட்டியது, விபத்துக்குப் பிறகு வாகனத்தை நிறுத்தி விவரங்களை வழங்கத் தவறியது மற்றும் விபத்தில் சிக்கியவருக்கு உதவத் தவறியது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள்  பதிவு செய்யப்பட உள்ளன.

சம்பந்தப்பட்ட கார், அவருடன் பயணித்த மற்றொரு நபரின் கணக்கைப் பயன்படுத்தி வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், அந்த நபரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த மற்றொரு நபர் தொடர்பில்லாத மற்றொரு சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதால், அவர் மீது மேலதிக நடவடிக்கை எடுக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குப் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் அந்த நபர், தற்போது 7 கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள உள்ளார். இந்த வழக்கில் அவருக்கு கடும் தண்டனை விதிக்கப்படுமா என்பது நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.