சிங்கப்பூரில் Car-Free Day 2026: வாகனங்களுக்கு தடை..! Joo Chiat பகுதியில் என்ன நடக்கிறது..?

சிங்கப்பூரில் Car-Free Day 2026: வாகனங்களுக்கு தடை..! Joo Chiat பகுதியில் என்ன நடக்கிறது..?

சிங்கப்பூர்: உலக கார் இல்லா தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூரில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை பொதுமக்களுக்காக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA), பல்வேறு அரசு அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் தொழில்துறை பங்காளிகளுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. மக்கள் நடைபயணம், சைக்கிள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வரும் அக்டோபர் 3-ஆம் தேதி மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை, Joo Chiat பகுதியில் Car-Free Day நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்காக டன்மேன் சாலை மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் சாலை இடையிலான ஜூ சியாட் சாலை பகுதி தற்காலிகமாக வாகனப் போக்குவரத்துக்கு மூடப்படும்.

இதன் மூலம் பொதுமக்கள் நடைபயணம் அல்லது சைக்கிள் மூலம் Joo Chiat பகுதியின் கலாசார மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை அனுபவிக்க முடியும்.

MRT மூலம் Joo Chiat பகுதிக்குச் செல்லும் பொதுமக்களுக்காக Marine Parade MRT நிலையத்தில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை SMRT சார்பில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

அதன்பிறகு இரவு நேரத்தில் Marine Parade சமூக அமைப்புகள் மற்றும் சமூகக் குழுக்களுடன் இணைந்து குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

இதில் Kueh Party, கலை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி மற்றும் நேரடி மேடை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

Car-Free Day நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, LTA மற்றும் அரசாங்க தொழில்நுட்ப அமைப்பு இணைந்து ‘The Invisible City’( கண்ணுக்குத் தெரியாத நகரம்) என்ற புதிய கூடாடும் விளையாட்டையும் உருவாக்கியுள்ளன.

இந்த விளையாட்டில் பங்கேற்பவர்கள் நடைபயணம், சைக்கிள் அல்லது பொதுப் போக்குவரத்து மூலம் சிங்கப்பூரின் பல்வேறு இடங்களுக்குச் சென்று குறிப்பிட்ட சவால்களை நிறைவேற்ற வேண்டும்.

ஒவ்வொரு சவாலும் நிறைவு செய்யப்படும் போது, விளையாட்டில் உள்ள சிங்கப்பூர் வரைபடத்தில் புதிய பகுதிகள் படிப்படியாக திறக்கப்படும். இதன் மூலம் மக்கள் தங்களுக்குத் தெரிந்த பகுதிகளையும் புதிய கோணத்தில் ஆராய முடியும்.

மேலும், செப்டம்பர் 14 முதல் 30 வரை ‘World Car-Free Day Challenge’ என்ற மற்றொரு சவாலும் நடைபெற உள்ளது.

Healthy 365 செயலியைப் பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து 4 நாட்களுக்கு தினமும் குறைந்தது 10,000 அடிகள் நடந்தால், சிறப்பு World Car-Free Day Badge-ஐப் பெற முடியும்.

நடைபயணத்தை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவதுடன், ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து முறைகளை ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22-ஆம் தேதி World Car-Free Day கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் அதனை முன்னிட்டு சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

காரை மட்டும் நம்பாமல் நடைபயணம், சைக்கிள் மற்றும் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதன் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் நிலையான போக்குவரத்தையும் உருவாக்க சிங்கப்பூர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.