மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை இனி தேவை இல்லையா..?? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஜெல்..!!
மூட்டுகள் சேதம் அடைந்தாலோ, அதன் குருத்தெலும்பு தேய்ந்து போனாலோ, விலகினாலோ கடுமையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இறுதியில் அறுவை சிகிச்சை தீர்வாக அமையும்.
அத்தகைய சிகிச்சையின்றி சேதமடைந்த மூட்டு பகுதியின் குருத்தெலும்பு தன்னைத்தானே சரிசெய்துகொள்ள உதவும் வகையில் ஒரு ஜெல்லை உருவாக்கியுள்ளனர், ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள்.
குருத்தெலும்பு தேய்ந்து போன பகுதிகளில் இந்த ஜெல் ஊசி மூலம் நேரடியாக செலுத்தப்பட்டு, புதிய திசுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவிடும். இந்த மீளுருவாக்க அணுகுமுறை மூட்டுவலி, விளையாட்டு தொடர்பான காயங்கள் மற்றும் முதுமையினால் மூட்டு சேதங்களை எதிர்கொள்பவர்களுக்கு உதவிடும்.
மூட்டு வலியை குறைத்து, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவையை தவிர்க்க உதவக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
முதுமை மற்றும் பரம்பரை காரணங்களால் மூட்டு குருதெலும்பு தேய்ந்து அதனால் அவதிப்படும் முதியவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். மேலும் ஓட்டப்பந்தயம்,கால்பந்து போன்ற விளையாட்டுகளின் போது தசைநார் மற்றும் மூட்டுகளில் திடீர் காயம் ஏற்படும் விளையாட்டு வீரர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.
கடுமையான தேய்மான நிலையை எட்டாத, ஆரம்பகட்ட மூட்டு பாதிப்பு கொண்டவர்கள் இதனால் முழுமையாக குணமடைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வகை தொழில் நுட்பமானது தற்போது ஆய்வக சோதனைகள் மற்றும் ஆரம்ப கட்ட மருத்துவ சோதனைகளில் வெற்றியைப் பெற்றுள்ளது.
இது உலகளாவிய மருத்துவப் பயன்பாட்டிற்கு வரும்போது லட்சக்கணக்கானோரின் மூட்டு மற்றும் மாற்று அறுவைச் சிகிச்சைத் தேவையை முற்றிலுமாகத் தவிர்க்கும் என்று நம்பப்படுகிறது.