சிங்கப்பூர்-மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! ICA வெளியிட்ட எச்சரிக்கை..!
சிங்கப்பூரின் தேசிய தினத்தை முன்னிட்டு வரும் நீண்ட வார இறுதியில், Woodlands மற்றும் Tuas Checkpoints-ல் மிகவும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) எச்சரித்துள்ளது.
ஆகஸ்ட் 7 முதல் 10ஆம் தேதி வரை நிலச் சோதனைச் சாவடிகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், குடிநுழைவு சோதனைகளை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
சமீபத்திய Hari Raya Haji, Vesak Day விடுமுறை மற்றும் ஜூன் பள்ளி விடுமுறை காலத்தில் Woodlands மற்றும் Tuas சோதனைச் சாவடிகள் வழியாக 1.8 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
ஜூன் 19ஆம் தேதி மட்டும் 5,98,000-க்கும் மேற்பட்ட பயணிகள் நிலச் சோதனைச் சாவடிகள் வழியாக குடிநுழைவு சோதனையை கடந்துள்ளனர். இது ஒரே நாளில் பதிவான புதிய உச்சமாகும்.
அந்த நேரத்தில், குறிப்பாக உச்ச நேரங்களில், மலேசியாவிலிருந்து ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக காரில் பயணித்தவர்கள் குடிநுழைவு சோதனையை முடிக்க 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பிப்ரவரி 28 முதல் சிங்கப்பூரின் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ICA தெரிவித்துள்ளது.
இதனால் தேசிய தின நீண்ட வார இறுதியில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், உச்ச நேரங்களில் கூடுதல் காத்திருப்பு நேரம் ஏற்படலாம் எனவும் ICA குறிப்பிட்டுள்ளது.
பயணிகளுக்கு ICA முக்கிய அறிவுரை: பயணிகள் முடிந்தவரை அதிகாலை அல்லது இரவு நேரம் போன்ற நெரிசல் குறைவான நேரங்களில் பயணம் செய்யுமாறு ICA அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பயணம் தொடங்குவதற்கு முன் Woodlands மற்றும் Tuas Checkpoints-ல் நிலவும் போக்குவரத்து நிலையை சரிபார்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
குடிநுழைவு செயல்முறையை விரைவுபடுத்த, MyICA செயலி மூலம் உருவாக்கப்படும் QR குறியீடுகளை பயன்படுத்துமாறும் பயணிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். QR குறியீடு மற்றும் புதிய குடிநுழைவு நடைமுறைகள் மூலம் உச்ச நேரப் புறப்பாட்டில் சோதனைச் சாவடிகளின் செயல்திறன் 35 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதாக ICA தெரிவித்துள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை: சோதனைச் சாவடிகளில் வரிசையை மீறி முன்னேறுவது (queue cutting) போக்குவரத்து நெரிசலை மேலும் மோசமாக்கும் என்பதால், வாகன ஓட்டிகள் ஒழுங்காக வரிசையில் செல்ல வேண்டும் என ICA தெரிவித்துள்ளது.
வரிசையை மீறும் வாகன ஓட்டிகள் திருப்பி அனுப்பப்பட்டு, வரிசையின் கடைசியில் மீண்டும் இணையுமாறு உத்தரவிடப்படலாம். அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ICA எச்சரித்துள்ளது.
தேசிய தின நீண்ட வார இறுதியில் அதிக அளவிலான பயணிகள் சிங்கப்பூர்–மலேசியா எல்லையை கடக்கக்கூடும் என்பதால், பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு கூடுதல் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என ICA வலியுறுத்தியுள்ளது.