புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசின் முக்கிய அறிவிப்பு..!! 2027 முதல் 4 புதிய மாற்றங்கள்..!
சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM), 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஆரம்ப சுகாதாரத் திட்டத்தில் (Primary Care Plan – PCP) பல்வேறு மேம்பாடுகளை அமல்படுத்த உள்ளது.
தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவைகள் எளிதாகக் கிடைப்பதுடன், முதலாளிகளுக்கான சுகாதாரச் செலவுகளும் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.
முக்கியமாக என்ன மாற்றம்? 1. மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் அதிகரிப்பு: தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கூடுதல் PCP கிளினிக்குகள் அமைக்கப்படும். இதன் மூலம் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்குமிடத்திலிருந்து 2 கி.மீ. தொலைவுக்குள் மருத்துவ சேவையைப் பெறும் வகையில் வசதி மேம்படுத்தப்படும்.
2. 6 பகுதிகளில் இருந்து 4 பெரிய மண்டலங்கள்: தற்போது உள்ள ஆறு புவியியல் பகுதிகள், 2027 ஏப்ரல் முதல் நான்கு பெரிய மண்டலங்களாக ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் மருத்துவ சேவை வழங்குநர்கள் அதிகமான தொழிலாளர்களுக்கு சேவை வழங்கி, செலவுகளைச் சீராக வைத்திருக்க முடியும்.
3. மருத்துவ ஆலோசனைக்கு $5 கட்டணம்: நேரடி மருத்துவ ஆலோசனை மற்றும் Telemedicine சேவைகளுக்கான தொழிலாளர்களின் Co-payment கட்டணம் ஒரு ஆலோசனைக்கு $5 என ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்படும்.
4. முதலாளிகளுக்கான ஆன்லைன் பதிவு வசதி: தொழிலாளர்களை PCP திட்டத்தில் பதிவு செய்வதற்கும், திட்டத்தை நிர்வகிப்பதற்கும் MOM புதிய PCP Enrolment Portal ஒன்றை உருவாக்கும். இதனால் பதிவு நடைமுறை எளிதாகும்.
தற்போதைய PCP திட்டம் 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தகுதியுள்ள Work Permit மற்றும் S Pass வைத்திருக்கும், குறிப்பாக தங்குமிடங்களில் வசிக்கும் அல்லது Construction, Marine Shipyard மற்றும் Process (CMP) துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டம் கட்டாயமாக உள்ளது.
2027 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றங்கள் மூலம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவையை மேலும் எளிதாகவும் விரைவாகவும் அணுகும் வாய்ப்பு கிடைக்கும் என MOM தெரிவித்துள்ளது.