S$15.8 மில்லியன் மோசடி வழக்கு..!! Sakae Holdings முன்னாள் இயக்குநருக்கு 10½ ஆண்டு சிறை..!
சிங்கப்பூரில் Sakae Holdings நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான Ong Siew Kwee என்பவருக்கு 10 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Bugis Cube வளர்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய கூட்டு நிறுவனத்திலிருந்து S$15.8 மில்லியன் முறைகேடாக மாற்றப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
56 வயதான Ong Siew Kwee, ‘Andy’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் கடந்த மே மாதம் நம்பிக்கை மோசடி (criminal breach of trust), ஆவணப் போலியைத் தூண்டியது மற்றும் நீதிமன்றத்தில் பொய்யான சாட்சியம் அளித்தது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கின் மையமாக இருந்தது Bugis Cube கட்டிடத்தை வாங்குவதற்காக உருவாக்கப்பட்ட Griffin Real Estate Investment Holdings (GREIH) என்ற கூட்டு நிறுவனமாகும். 2009ஆம் ஆண்டு Sakae Holdings மற்றும் Ong தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்திருந்தன.
விசாரணையின்படி, 2012ஆம் ஆண்டு GREIH மற்றும் ERC Institute இடையே குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் காட்டும் போலி மற்றும் பின்னோக்கித் தேதியிடப்பட்ட ஆவணங்கள் உருவாக்கப்பட்டன.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், குத்தகை முன்கூட்டியே முடிக்கப்பட்டதாகக் கூறி ERC நிறுவனத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டியிருந்ததாக ஒரு போலியான பின்னணி உருவாக்கப்பட்டதாக நீதிமன்றம் கண்டறிந்தது.
இதன் பின்னர், 2012 செப்டம்பரில் GREIH-இன் கணக்கிலிருந்து S$15.8 மில்லியன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. இதில் S$14.3 மில்லியன் ERC International-க்கும், S$1.5 மில்லியன் ERC Unicampus-க்கும் சென்றதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணப் பரிமாற்றங்களுக்கு போதுமான சட்டபூர்வ காரணம் இல்லை என்றும், இதனால் GREIH நிறுவனத்துக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் நீதிமன்றம் கண்டறிந்தது.
இந்தப் பணப் பரிமாற்றம் தொடர்பாக Sakae Holdings சட்ட நடவடிக்கை எடுத்தபோது, குத்தகை ஒப்பந்தம் உண்மையில் 2012 மார்ச் மாதத்திலேயே கையெழுத்தானது எனக் காட்டும் வகையில் நீதிமன்றத்தில் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், அந்த ஆவணங்கள் பின்னர் உருவாக்கப்பட்டவை என்றும், அவை உண்மையானவை அல்ல என்றும் நீதிமன்றம் தீர்மானித்தது.
Ong-ன் பதவியும், அவர்மீது நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த உயர்ந்த அளவிலான நம்பிக்கையும் இல்லையெனில் இந்தப் பணத்தை இவ்வளவு எளிதாக மாற்றியிருக்க முடியாது என்று நீதிபதி Jill Tan குறிப்பிட்டார். மேலும், முறைகேடு செய்யப்பட்ட தொகையான S$15.8 மில்லியன் மிகவும் பெரிய தொகை என்றும் நீதிமன்றம் கருதியது.
Ong பின்னர் முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்தியிருந்தாலும், அது தன்னிச்சையாகச் செய்யப்பட்ட திருப்பிச் செலுத்தல் அல்ல; நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே நடந்ததாக நீதிபதி குறிப்பிட்டார். எனவே, இதை அவரது மனமாற்றத்திற்கான ஆதாரமாகக் கருத முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய Ho Yew Kong மற்றும் Chua Wei Tat ஆகிய இருவருக்கும் தலா 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் High Court வழக்கில் இருவரும் High Court வழக்கில் பொய்யான சாட்சியம் அளித்த குற்றத்தில் மே மாதம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தனர்.
Ong Siew Kwee உள்ளிட்ட மூவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட குற்றத் தீர்ப்பு மற்றும் சிறைத்தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்குடன் தொடர்புடைய சில குற்றச்சாட்டுகள் இன்னும் நிலுவையில் உள்ளதால், அவை பின்னர் கையாளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.