சிங்கப்பூரர்களை ஈர்க்கும் ஜோகூர் பாரு மருத்துவமனைகள்..! காரணம் என்ன..?

சிங்கப்பூரர்களை ஈர்க்கும் ஜோகூர் பாரு மருத்துவமனைகள்..! காரணம் என்ன..?

சிங்கப்பூர்: கோவிட்-19 தொற்றுக்குப் பிறகு, ஜோகூர் பாருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மெடிசேவ் வசதியைப் பயன்படுத்தும் சிங்கப்பூர் நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரின் எல்லை கடந்த மெடிசேவ் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜோகூர் பாருவின் ஒரே மருத்துவமனையான ரீஜென்சி சிறப்பு மருத்துவமனை இதனைத் தெரிவித்துள்ளது.

மெடிசேவ் பயன்படுத்தும் நோயாளிகளில் சுமார் 90% பேர் பெண்கள். அவர்களில் பலர் மகப்பேறு மற்றும் மகளிர் நலச் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

தினசரி இந்தோனீசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து 150 முதல் 200 நோயாளிகள் வரை மருத்துவமனைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோகூர் பாருவில் சிகிச்சைக்கான குறைந்த செலவு மற்றும் சிங்கப்பூரிலிருந்து எளிதாகச் சென்றடையக்கூடிய வசதி ஆகியவை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

2010ஆம் ஆண்டு மார்ச் முதல், சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட உள்நோயாளிச் சிகிச்சைகள் மற்றும் ஒரே நாளில் மருத்துவமனையில் சேர்ந்து அறுவைச் சிகிச்சை செய்து திரும்பும் சிகிச்சைகளுக்கு மெடிசேவ் கணக்கைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் சில சிகிச்சைகளுக்கான கட்டணம் சிங்கப்பூரைவிட 24% முதல் 74% வரை குறைவாக இருந்தாலும், பயணம், தங்குமிடம், காப்புறுதி உள்ளிட்ட கூடுதல் செலவுகளையும் நோயாளிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், 2027ஆம் ஆண்டு தொடங்கப்படவுள்ள ஜோகூர் பாரு–சிங்கப்பூர் விரைவு ரயில் சேவை (RTS Link), இரு நாடுகளுக்கும் இடையிலான மருத்துவப் பயணத்தை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.