துவாஸ் சோதனைச் சாவடியில் மாபெரும் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!!
சிங்கப்பூர்: மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை கடத்த முயன்ற 30 வயது ஆடவரை குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் கைது செய்துள்ளது.
கடந்த டிசம்பர் 1ஆம் தேதி துவாஸ் சோதனைச்சாவடியில், மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாரி வழக்கமான சோதனைக்காக நிறுத்தப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் சோதனையில், அந்த லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 பெட்டிகள் கொண்ட வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆடவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான விவரங்களை குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் திங்கட்கிழமை (06.01.26) தனது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டது.
சிங்கப்பூரில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை வாங்குதல், விற்பனை செய்தல், வைத்திருத்தல் அல்லது விநியோகம் செய்வது ஆகியவை கடுமையான குற்றங்களாகக் கருதப்படுகின்றன.
இவ்வகை குற்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டால்,வரி ஏய்ப்பு தொகைக்கு இணையான அதிகபட்சம் 40 மடங்கு அபராதம் அல்லது ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும், இத்தகைய சட்டவிரோத செயல்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும், அதன்மூலம் ஈட்டப்பட்ட பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.