நாள்பட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய AI கருவி..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒருவரின் தற்போதைய உடல்நிலையை ஆய்வு செய்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அவருக்கு நீரிழிவு மற்றும் உயர்ந்த இரத்தக் கொழுப்பு போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியக்கூடிய புதிய செயற்கை நுண்ணறிவு கருவியை சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.இந்த கருவி “மேலும் ஆரோக்கியமான சிங்கப்பூர்” திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கருவி 2027ஆம் ஆண்டு தொடக்கம் முதல் மருத்துவர்களிடம் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் ஒருவரின் உடல்நிலை தகவல்களை மதிப்பீடு செய்து, அவருக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நோய் அபாயங்களை முன்கூட்டியே கணிக்க முடியும்.
ஒருவருக்கு நாள்பட்ட நோய் ஏற்படும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டால், மருத்துவர் அவரின் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்ய பரிந்துரைப்பார். அதேபோல், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் பரிசோதனைக்கு பதிலாக ஆண்டுதோறும் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தலாம்.
மேலும் “மேலும் ஆரோக்கியமான சிங்கப்பூர்” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கூடுதல் பரிசோதனைகளுக்கும் அரசாங்கம் தொடர்ந்து மானியம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.