பிரின்ஸ் குழுமத்திற்கு புதிய சிக்கல்..!!சென் ஷி தொடர்புடைய சொத்துகள் குறிவைப்பு..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கம்போடிய வர்த்தகர் சென் ஷி மற்றும் அவரின் பிரின்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய மேலும் பல சொத்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்யக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிமன்ற விசாரணையின் போது இந்த சொத்துகள் குறித்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, $3.7 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள காசோலைகள், $257,000க்கும் மேல் பெறுமானமுள்ள பங்குப் பத்திரங்கள் மற்றும் $362,200 மதிப்புள்ள பாதுகாப்பு வைப்புத்தொகை உள்ளிட்டவற்றைக் கைப்பற்ற முயல்வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சென்னின் குடும்ப அலுவலகமான டிடபிள்யூ கேப்பிட்டலின் முன்னாள் ஊழியர் ஒருவர், அலுவலக நிதியை மீட்க அனுமதி கோரி கடந்த நவம்பர் 18 அன்று நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். அந்த விண்ணப்பம், நிறுவனத்தில் எஞ்சியிருக்கும் இயக்குநரின் சார்பில் முன்னாள் மனிதவள மேலாளர் மூலம் முன்வைக்கப்பட்டது.
டிடபிள்யூ கேப்பிட்டல் உட்பட கேப்பிட்டல் ஸோன் வேர்ஹவுசிங், ஸ்கைலைன் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட், சிட்டிலிங்க் சொல்யூஷன்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களிலிருந்து நிதியை மீட்க கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் அனைத்தும் சென் ஷியுடன் நேரடியாகவோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமோ தொடர்புடையதாக கூறப்படுகிறது.
முன்னாள் மேலாளர் கோரிய தொகையில், கணக்குகள் முடக்கப்பட்ட பின்னர் செலவிடப்பட்ட S$3220,000 க்கும் அதிகமான சம்பளத் தொகை, செலுத்த வேண்டிய S$459,000 நிறுவன வரி மற்றும் எதிர்காலச் செலவுகளுக்கான S$102,000 மாதாந்திர செலவுகள் முதலியன அடங்கும். ஆனால், இந்த நிதியை வழங்க அனுமதிப்பதற்கு வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.