சிங்கப்பூர்: தெங்கா வட்டாரத்தில் இன்று(28.02.26) புதிய பலதுறை மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இம்மருந்தகம் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு சுகாதாரச் சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றாக தெங்கா காணப்படுகிறது. இதனால் இளம் குடும்பங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு சுகாதாரச் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஏற்ற ஆலோசனைகள், பொதுவான உடல்நல பரிசோதனைகள் மற்றும் மருந்து வழங்கல் போன்ற சேவைகள் இங்கு இடம்பெறும். குடும்ப மையப்படுத்தப்பட்ட சுகாதார அணுகுமுறையை வலுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
தேசிய பல்கலைக்கழக மருந்தக அமைப்பின் கீழ் செயல்படும் மருந்தகங்களின் முதல் தாய்ப்பால் ஆலோசனைச் சேவை நிலையமும் இதன் ஒரு பகுதியாக திறக்கப்பட்டுள்ளது. தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு சரியான முறையில் தாய்ப்பால் ஊட்டுவது குறித்து பயிற்சியுற்ற தாதியர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர்.
மேலும், 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆரோக்கியமாகவும் துடிப்பாகவும் வாழ உதவும் சமூகத் திட்டமான “என்யூஎச்எஸ் கனெக்ட்” தெங்கா பலதுறை மருந்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது நடுத்தர வயதினரின் உடல்நலத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் திட்டமாகும்.
இந்த புதிய மருந்தகம் தெங்கா சமூகத்தின் வளர்ச்சிக்கும் குடும்பங்களின் நலனுக்கும் முக்கிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.