சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் புதிதாக கட்டப்பட்ட 10.8 கிலோமீட்டர் நீளமுள்ள சைக்கிள் பாதை நேற்று (18.10.25) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.
நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த புதிய பாதை வலையமைப்பு தோ பாயோ HDB ஹப், அருகிலுள்ள சந்தைகள், உணவகங்கள், பூங்காக்கள் மற்றும் பள்ளிகள் போன்ற முக்கிய வசதிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான அணுகலை வழங்குகிறது. மேலும், போக்குவரத்து மையங்களுடன் உள்ள இணைப்புகளையும் இது வலுப்படுத்துகிறது.இதனால் குடியிருப்பாளர்கள் நேரடியாக MRT நிலையங்களுக்கு சைக்கிளில் செல்ல முடியும்.
புதிய பாதை வலையமைப்பு நகரங்களுக்கிடையேயான சைக்கிள் ஓட்டும் இணைப்பையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, தோ பாயோ லோரோங் 8 பகுதியில் உருவாக்கப்பட்ட புதிய சைக்கிள் பாதை அருகிலுள்ள கேலாங் பார்க் இணைப்பு வழியாக அண்டை நகரங்களுக்கு எளிதான அணுகலை வழங்குகிறது. இதன் மூலம் குடியிருப்பாளர்கள் தற்போது வெறும் 15 நிமிடங்களில் பிஷான்–ஆங் மோ கியோ பூங்காவிற்கு சைக்கிளில் சென்று, அங்கிருந்து கேலாங் நதி வழியாக மெரினா பே பகுதியை எளிதாக அடைய முடியும்.
இந்த திட்டம் 2.8 கிலோமீட்டர் நீளமுள்ள திறந்தவெளி வடிகால்களை நிலத்தடி வடிகால்களாக மாற்றி, அந்த இடத்தை நடைபாதை மற்றும் சைக்கிள் பாதையாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தோ பாயோ லோரோங் 1A சாலையும் பிரத்யேக சைக்கிள் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரண்டு Zebra Crossings புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
பிராடெல் MRT நிலையத்தில் 64 புதிய சைக்கிள் நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், 15 க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களில் புதிய பாதசாரி மாற்றுப்பாதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. எட்டு முக்கிய சந்திப்புகளில் நடைபாதைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் குடியிருப்பாளர்களின் பயணம் மேலும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் அமையும்.
தீவு முழுவதும் சைக்கிள் ஓட்டுதல் வலையமைப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், 2030 ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் சுமார் 1,300 கிலோமீட்டர் நீளமுள்ள சைக்கிள் பாதைகள் உருவாக்கப்படும் என்று LTA தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் நிறைவேறிய பின், சிங்கப்பூரின் 80% குடியிருப்பாளர்கள் சில நிமிடங்களில் அருகிலுள்ள சைக்கிள் பாதையை எளிதாக அடைய முடியும். இதன் மூலம் சைக்கிள் ஓட்டுதல் பாதுகாப்பான, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் ஆரோக்கியமான போக்குவரத்து முறையாக மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.