வாடிக்கையாளர்களை ஏமாற்றிய இணையதள விற்பனை நிறுவனங்கள்..!! CCCS நடவடிக்கை..!!
சிங்கப்பூர்: வாடிக்கையாளர்களை ஏமாற்றி, அவசரமாக பொருட்களை வாங்க வைப்பதற்காக சில தந்திரங்களைப் பயன்படுத்திய இணைய விற்பனை நிறுவனங்கள் மீது சிங்கப்பூர் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (CCCS) நடவடிக்கை எடுத்துள்ளது.
போட்டி மற்றும் நுகர்வோர் மன்றம் நேற்று (மே 18) காலை இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் Boarding Gate என்ற பயண பொருள்கள் கடையை நடத்தும் “Seager Inc” மெத்தை விற்பனையாளரான “Origin Sleep” மற்றும் ஆன்லைன் விற்பனையாளரான “Light in the Box”ஆகியவை அடங்கும்.
வாடிக்கையாளர்களுக்கு ஒரு போலியான உணர்வை தருவதற்கு தவறான விளம்பரங்களைப் பயன்படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது .
போலி வாடிக்கையாளர் எண்ணிக்கை, போலி கவுண்ட்டவுன் டைமர்கள் மற்றும் பொய்யான தள்ளுபடித் தகவல்களை காண்பித்து, தங்களது பொருட்களை அதிக தேவை இருப்பது போல ஒரு மாயையை பொதுமக்களிடம் உருவாக்கியதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
Boarding Gate இணையதளம் XX பேர் இந்த பொருட்களைப் பார்க்கிறார்கள் என்ற செய்தியைக் காண்பித்து, நிகழ்நேர பார்வையாளர்களின் தேவையையும் நடமாட்டத்தையும் அதிகமாக இருப்பது போன்று ஒரு தவறான தோற்றத்தை உருவாக்கியுள்ளது.
மெத்தை விற்பனையாளரான Origin Sleep இதே போன்ற ஒரு தந்திரத்தைப் பயன்படுத்தி, எந்த நிகழ்நேர தரவும் இல்லாமல் மற்றவர்களும் வாங்க விரும்புகிறார்கள் XX பேர் இந்த பொருளைத் தங்கள் கூடையில் சேர்த்துள்ளனர் என்பது போன்ற செய்திகளைக் காண்பித்துள்ளது.
இது குறித்த விசாரணையின் போது சில்லறை விற்பனையாளர்களில் ஒருவர் தனது இணையதள வடிவமைப்பு வெளிநாட்டு விநியோகஸ்தரிடம்ம் இருந்து வாங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
மூன்று நிறுவனங்களும் தவறான வழிகாட்டும் நடைமுறைகளை செய்ய மாட்டோம் எனவும், எதிர்காலத்தில் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தவிர்ப்போம் எனவும் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையத்திடம் முறையாக உறுதியளித்துள்ளது.
Light in the Box என்ற நிறுவனம் சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பாவில் உள்ள தனது இணையதளம் மற்றும் மொபைல் செயலில் இருந்து தவறான வழிகாட்டும் உள்ளடக்கத்தை அகற்றிவிட்டது.
இது போன்ற நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்கள் நுகர்வோர் சங்கத்தின் உதவி எண் 6277 5100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது https://complaints.case.org.sg/ என்ற இளையதளம் மூலம் தங்களது புகார்களை அளிக்கலாம்.