888 தொகுப்புகள் மட்டுமே..! சிங்கப்பூர் – சீனா இணைந்து வெளியிட்ட தங்கம், வெள்ளிப் பதக்கங்கள்!

888 தொகுப்புகள் மட்டுமே..! சிங்கப்பூர் – சீனா இணைந்து வெளியிட்ட தங்கம், வெள்ளிப் பதக்கங்கள்!

சிங்கப்பூரின் The Singapore Mint மற்றும் சீனாவின் Shanghai Mint ஆகிய நாணயத் தயாரிப்பு நிறுவனங்கள் முதன்முறையாக இணைந்து மூன்று வகையான சிறப்பு சேகரிப்புப் பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

சீனாவின் பாரம்பரிய கலாசாரத்தையும் சிங்கப்பூரின் அடையாளங்களையும் இணைக்கும் வகையில் இந்தச் சிறப்புத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தங்கம் மற்றும் வெள்ளியால் தயாரிக்கப்பட்ட நினைவுப் பதக்கங்கள் உள்ளிட்ட மூன்று வகையான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

‘Wind and Water Rise, Dragon Soars Thousands of Miles’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நினைவுப் பதக்கங்கள் தனித்துவமான எண் 8 வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

இதன் ஒரு பக்கத்தில் மேகங்களுக்கு இடையே பறக்கும் சீன டிராகனும், மறுபக்கத்தில் மலை மற்றும் கடல் பின்னணியில் சிங்கத்தின் உருவமும் இடம்பெற்றுள்ளன. டிராகன் உயர்ந்த இலட்சியங்களையும், சிங்கம் தைரியம் மற்றும் வலிமையையும் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளிப் பதக்கத்தில் முக்கியமான வடிவங்களைத் தனித்துக் காட்டும் வகையில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி இணைந்த சிறப்புத் தொகுப்பு வெறும் 888 மட்டுமே தயாரிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒரே வரிசை எண்ணைக் கொண்ட சான்றிதழும் வழங்கப்படும். இந்தத் தொகுப்பு சிங்கப்பூரில் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

இரண்டாவது சேகரிப்புப் பொருளாக சீனாவின் பாரம்பரிய வானியல் மற்றும் பருவகால மாற்றங்களை அடிப்படையாகக் கொண்ட வெள்ளித் தட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதில் 24 பருவகாலங்கள், துருவ நட்சத்திரம் மற்றும் பருவங்களுக்கு ஏற்ப திசை மாறும் வடதுருவ நட்சத்திரக் கூட்டத்தின் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மையப்பகுதியில் ஆடு ராசியின் உருவம் வண்ண அச்சிடுதல் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட அலங்காரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராசித் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் முதல் வடிவமைப்பு இதுவாகும். தொடர்ந்து மற்ற ராசி விலங்குகளையும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்றாவது சேகரிப்புப் பொருளாக சிங்கப்பூர் மற்றும் ஷாங்காய் நகரங்களின் அடையாளங்களையும் நகரக் காட்சிகளையும் இணைத்து தங்கம் அல்லது வெள்ளிக் கட்டிகளுடன் கூடிய சிறப்புத் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பு சீனாவில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்தக் கூட்டணி குறித்து சிங்கப்பூர் நாணயத் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லூ சியாங் நியாங் கூறுகையில், இரு நிறுவனங்களின் வடிவமைப்பு, தயாரிப்பு நுட்பம் மற்றும் சந்தை அனுபவங்களை ஒன்றிணைக்கும் முக்கியமான மைல்கல்லாக இந்தக் கூட்டணி அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் புதிய வடிவமைப்புகள், தயாரிப்பு மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட்டு, சிங்கப்பூர், சீனா மற்றும் சர்வதேசச் சந்தைகளுக்காக மேலும் பல சிறப்புச் சேகரிப்புப் பொருட்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.