ஒரே தேதி… ஓராண்டு இடைவெளி! யாங் யின் வழக்குடன் தொடர்புடைய இரு மூதாட்டிகளின் மரணம்!

ஒரே தேதி… ஓராண்டு இடைவெளி! யாங் யின் வழக்குடன் தொடர்புடைய இரு மூதாட்டிகளின் மரணம்!

சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யாங் யின் சொத்துப் பறிப்பு வழக்கில் தொடர்புடைய 97 வயது ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜாங் பி ஜென் (Zhang Bi Zhen) காலமானார். இவர், அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட செல்வந்த மூதாட்டி சோங் கின் சுனின் (Chung Khin Chun) நீண்டகால நெருங்கிய தோழி ஆவார்.

கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி 98 வயதில் சோங் கின் சுன் காலமானார். சரியாக ஓராண்டுக்குப் பிறகு, 2026ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதியன்று ஜாங் பி ஜென்னும் உயிரிழந்துள்ளார். இருவரும் ஒரே மாதத்தில், ஒரே தேதியில் காலமானது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

2024ஆம் ஆண்டு வீட்டில் கீழே விழுந்து இரண்டு நாள்கள் தவித்த ஜாங் பி ஜென்னை, அவரது தோழி லிண்டா கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்தார். அதன்பிறகு, அவரைத் தனது வீட்டில் தங்கவைத்து லிண்டா கவனித்து வந்தார்.

இந்நிலையில், உயிரிழப்பதற்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜாங் பி ஜென்னுக்கு உணவில் நாட்டம் குறைந்தது. பின்னர் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் சிங்கப்பூரின் செங்காங் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்ற நிலையில், அக்டோபர் 25ஆம் தேதி அவர் உயிரிழந்தார். நிமோனியா அவரது இறப்புக்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த முன்னாள் சுற்றுலா வழிகாட்டியான யாங் யின், சோங் கின் சுனின் சொத்துகளில் இருந்து S$1.1 மில்லியன் தொகையைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டவர். இந்த வழக்கு சிங்கப்பூரில் பெரும் கவனத்தைப் பெற்றது.

ஜாங் பி ஜென் இறுதிச்சடங்கு நடத்த வேண்டாம் என்றும், அனைத்தையும் எளிமையாகச் செய்ய வேண்டும் என்றும் முன்கூட்டியே தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். அதன்படி, அவரது தோழி லிண்டா அந்த விருப்பத்தை மதித்து, அவர் உயிரிழந்த மறுநாளே உடலைத் தகனம் செய்தார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த நட்பு, வாழ்க்கையின் இறுதிக்காலம் வரை தொடர்ந்த பாசம்… ஓராண்டு இடைவெளியில் ஒரே தேதியில் இருவரும் காலமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலம் பிரித்தாலும், அவர்களின் நட்பின் நினைவுகள் என்றும் மறையாது.