போலி மின்னஞ்சலை நம்பி அனுப்பிய US$12.8 மில்லியன்..!! நடந்தது என்ன?

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்திடம் இருந்து மின்னஞ்சல் மோசடி மூலம் ஏமாற்றிப் பெறப்பட்ட US$12.8 மில்லியன் (1.28 கோடி அமெரிக்க டாலர்) முழுத் தொகையையும் சிங்கப்பூர் காவல்துறை மீட்டுள்ளது. கம்போடியக் காவல்துறை மற்றும் OCBC வங்கியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விரைவான நடவடிக்கையின் மூலம் இந்தப் பணம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு, அதன் வணிகக் கூட்டாளரிடமிருந்து வந்ததுபோல் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. 2026 அக்டோபர் 1ஆம் தேதி வந்த அந்த மின்னஞ்சலில், பணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இனி புதிய கணக்குக்கு பணத்தை அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பணம் செலுத்துவதற்கான ஆவணங்களில் சில முரண்பாடுகள் இருப்பதை நிறுவனம் கவனித்தபோதிலும், மோசடிக்காரர்கள் வணிகக் கூட்டாளரின் நிறுவனக் கையொப்பம் மற்றும் முத்திரையுடன் கூடிய அங்கீகாரக் கடிதத்தை வழங்கியுள்ளனர். இதனால், புதிய வங்கிக் கணக்குக்குப் பணம் செலுத்துவது உண்மையான கோரிக்கை என நம்ப வைக்கும் வகையில் மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 13ஆம் தேதி நிறுவனம் US$12.8 மில்லியன் தொகையை மோசடிக்காரர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளது. பின்னர், அந்த அங்கீகாரக் கடிதம் போலியானது என்பது தெரியவந்தது
அக்டோபர் 26ஆம் தேதி, நிறுவனத்தின் உண்மையான வணிகக் கூட்டாளர் தங்களுக்குச் செலுத்த வேண்டிய பணம் இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தபோதுதான் மோசடி அம்பலமானது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நிறுவனம் காவல்துறையிடம் புகார் அளித்தது.
புகாரைப் பெற்ற சிங்கப்பூர் காவல்துறையின் சைபர் கட்டளைப் பிரிவு (Cyber Command), உடனடியாக கம்போடியக் காவல்துறையுடனும் OCBC வங்கியுடனும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டது. விரைவான ஒருங்கிணைப்பின் மூலம் மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்த பணம் கண்டறியப்பட்டு, US$12.8 மில்லியன் முழுத் தொகையும் வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
எல்லை தாண்டி செயல்படும் நிதி மோசடிகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்கவும் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
