சிங்கப்பூரில் 4 வயது சிறுவனுக்கு நடந்தது என்ன? சிகிச்சையாளருக்கு $5,000 அபராதம்!

சிங்கப்பூரில் 4 வயது சிறுவனுக்கு நடந்தது என்ன? சிகிச்சையாளருக்கு $5,000 அபராதம்!

சிங்கப்பூரில், ஆஸ்பெர்ஜர் நோய்க்குறி கொண்ட 4 வயது சிறுவனுக்குப் பயிற்சி அளித்தபோது, அவனை நாற்காலியிலிருந்து தரையில் இழுத்துச் சென்ற 29 வயது பெண் நடத்தை சிகிச்சையாளருக்கு $5,000 சிங்கப்பூர் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டிரிஷியா லீ ஹ்சியன் (Tricia Lee Hsien) என்ற அந்தப் பெண், சிறுவனுக்குக் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 28ஆம் தேதி நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

லீ, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் Autism Recovery Network Singapore அமைப்பில் நடத்தை சிகிச்சையாளராகப் பணியில் சேர்ந்தார். அதே ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், சிறுவனின் வீட்டில் வாரத்திற்கு இருமுறை அவருக்குப் பயிற்சி அளித்து வந்தார். சிறுவனின் பெற்றோர், அவனது அறையில் கண்காணிப்புக் கேமராவைப் பொருத்தியிருந்தனர். சிகிச்சையாளர் சிறுவனைப் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில், பயிற்சியின்போது சிறுவன் அழுதாலோ கோபப்பட்டாலோ அவர்கள் தலையிடாமல் இருந்தனர்.

2024 ஜூன் 13ஆம் தேதி பிற்பகல் நடைபெற்ற பயிற்சியின்போது, லீ சிறுவனுக்குப் புத்தகத்தைக் காட்டி அதிலிருந்த எழுத்துகளையும் படங்களையும் விளக்கினார். சிறிது நேரத்தில் சிறுவன் இருக்கையில் அமைதியின்றி அசையத் தொடங்கியதால், தனது இரு கைகளையும் மேசையில் அமைதியாக வைக்கும்படி அவரிடம் கூறினார். ஆனால், சிறுவன் அதைக் கேட்காமல் புத்தகத்தைப் பிடிக்க முயன்றான். லீ புத்தகத்தை விலக்கியபோது, சிறுவன் அவரது முகத்தில் தாக்கியதில் கண்ணாடி கீழே விழுந்தது.

இதையடுத்து, லீ கோபத்துடன் தனது கையை அசைத்ததுடன், கையிலிருந்த புத்தகத்தைக் கீழே வீசினார். பின்னர் அதை எடுத்து மேசையிலும் சுவரிலும் வீசியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சிறுவன் மீண்டும் அவரது முகத்தில் தாக்கியதுடன், கண்ணாடியையும் பிடுங்கினான். லீ கண்ணாடியை மீண்டும் எடுத்துக்கொண்ட பின்னர், மாலை சுமார் 5.27 மணியளவில் சிறுவனின் வலது கையைப் பிடித்து, அவன் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து தரைக்கு இழுத்துச் சென்றார். இதனால் சிறுவனுக்கு உடல் வலி ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.

பின்னர் சிறுவனைத் தூக்கிக்கொண்டு அறைக்கு வெளியே சென்ற லீ, சிறுவன் தனது முகத்தில் தாக்கியதாக அவனது தந்தையிடம் தெரிவித்தார். சிறுவனை அமைதிப்படுத்தத் தந்தை பலமுறை முயன்றும் முடியாததால், அன்றைய பயிற்சியை முடித்துக்கொண்டார். பின்னர், சம்பவம் குறித்து அறிந்த சிறுவனின் தாய் கண்காணிப்புக் கேமரா பதிவுகளைப் பார்த்தபோது, சிகிச்சையாளர் சிறுவனைத் தரையில் இழுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளித்ததுடன், காவல்துறையிடமும் புகார் செய்தார்.

மறுநாள் சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டபோது, வெளிப்புறக் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதற்கிடையில், சம்பவம் நடந்த மறுநாளே லீ பணியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

நீதிமன்றத்தில், அரசுத் தரப்பு சிறுவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறைவாக இருந்ததையும், இது தனிப்பட்ட சம்பவமாக இருந்ததையும் சுட்டிக்காட்டியது. லீ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறுவனை அமைதிப்படுத்த அவனது தந்தையின் உதவியைப் பெறவே அவர் முயன்றதாகவும், அப்போது தனது செயலின் விளைவுகளைச் சரியாகச் சிந்திக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தீர்ப்பளித்த நீதிபதி, சிறுவன் முதலில் லீயைத் தாக்கியிருந்தாலும், நடத்தை சிகிச்சையாளரான அவர் சிறுவனின் நிலையைப் புரிந்துகொண்டு வேறு வழிகளில் சூழ்நிலையைக் கையாண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். சிறுவனுக்குக் காயம் ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட லீக்கு இறுதியில் $5,000 சிங்கப்பூர் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.