சிங்கப்பூரில் S$4,000 லஞ்சம் கேட்டதாகக் குற்றச்சாட்டு...முன்னாள் காண்டோ மேலாளர் மீது வழக்கு!

சிங்கப்பூர்: பாதுகாப்புச் சேவை ஒப்பந்தத்தைப் பெற்றுத் தர உதவுவதற்காக, குறைந்தது S$4,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் முன்னாள் காண்டோமினியம் மேலாளர் மீது இன்று (அக்டோபர் 28) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, 47 வயதான சிங்கப்பூரரான சீ ஹெங் சுவான் (Seah Kheng Chuan) என்பவர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஊழல் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு (CPIB) வெளியிட்ட தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் விஸ்லி 98 (Wisely 98) என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது, தி கிளேட்ஸ் (The Glades) குடியிருப்பின் மேலாளராக இருந்துள்ளார்.
அந்தக் குடியிருப்புக்கு அப்போது நிர்வாகச் சேவைகளை வழங்கி வந்த நிறுவனத்தின் சார்பில் அவர் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், ஜாசா இன்வெஸ்டிகேஷன் அண்ட் செக்யூரிட்டி சர்வீசஸ் (Jasa Investigation and Security Services) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியிடம் குறைந்தது S$4,000 லஞ்சம் கேட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்தத் தொகைக்குப் பதிலாக, தி கிளேட்ஸ் குடியிருப்பின் பாதுகாப்புச் சேவை ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துக்கு வழங்கப் பரிந்துரைப்பதாகக் கூறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றச்சாட்டின்படி, பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லஞ்சக் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார். இதனால், குற்றம் சாட்டப்பட்டவர் கேட்டதாகக் கூறப்படும் தொகை வழங்கப்படவில்லை.
இருப்பினும், லஞ்சம் கேட்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக S$1,00,000 அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியாகவே கருதப்படுவார்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
