சிங்கப்பூரில் இருந்து வந்த துயரச் செய்தி..!! மனவேதனையில் பெற்றோர்கள்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் உள்ள ஒரு அறையில், 34 வயதுடைய சீனப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பல ஆண்டுகளாக மகளுடன் தொடர்பில் இல்லாத பெற்றோர்,இந்த திடீர் செய்தியைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கு விரைந்து வந்து,அவரது உடலைக் கண்டபோது கடும் வேதனையில் ஆழ்ந்தனர்.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த ஜாங் கியுஜி என்பவர்,கடந்த ஆண்டு டிசம்பர் 20,2025 அன்று மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் இறந்து கிடந்தார். இறப்புச் சான்றிதழின் படி, அவர் பிற்பகல் 3.13 மணியளவில் உயிரிழந்ததாகவும், மரணத்திற்கான காரணம் அவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பெற்றோருக்கு உதவி செய்த உள்ளூர் இறுதிச் சடங்கு சேவை வழங்குநர் ஜெங் ஹைச்சுவான், ஜாங் கியுஜியின் பெற்றோர் விவசாயிகள் என்றும், குடும்பம் பொருளாதார ரீதியாக வசதியானது அல்ல என்றும் தெரிவித்தார்
காவல்துறை தூதரகம் மூலம் பெற்றோரைத் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து,அவர்கள் டிசம்பர் 29ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தனர். ஜாங் கியுஜியும் அவரது பெற்றோரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்பில் இல்லாத நிலையில், மகளின் மரணம் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ஜெங் ஹைச்சுவான் கூறினார்.
சிங்கப்பூரில் அவர் எவ்வளவு காலம் தங்கியிருந்தார், என்ன காரணத்தால் இந்த முடிவை எடுத்தார் என்பதுபோன்ற பல கேள்விகள் அவர்களுக்குள் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மகளின் கைபேசி கடவுச்சொல் பாதுகாப்புடன் இருப்பதால், அதிலுள்ள தகவல்களை பெற்றோர் அணுக முடியாத நிலையில் உள்ளனர்.
மேலும் ஜாங் கியுஜியை அறிந்தவர்கள் இருந்தால், தன்னை தொடர்பு கொள்ளுமாறு ஜெங் ஹைச்சுவான் கேட்டுக் கொண்டுள்ளார்.அந்த தகவல் WeChat மூலம் பெற்றோருக்கு அனுப்பப்படும் எனவும் கூறினார்.
முதற்கட்ட விசாரணைகளில், இந்த சம்பவத்தில் கொலை சம்பந்தம் இல்லை எனத் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இருப்பினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜாங் கியுஜிக்கு இரண்டு இளைய உடன்பிறப்புகள் இருப்பதாகவும், குடும்பத்தின் நிதி நிலை மற்றும் சம்பவத்தின் திடீர் தன்மை காரணமாக அவர்கள் சிங்கப்பூருக்கு வர முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.