செயற்கை நுண்ணறிவு போட்டியை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஒரு சிறிய, திறந்தநிலை நாடாக இருப்பதாலும், தனது போட்டித்தன்மையை பெருமளவில் தொழில்நுட்பத்தின் மீது சார்ந்திருப்பதாலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான சவால்களை மற்ற நாடுகளைவிட விரைவாக எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடைபெற்ற உலகப் பொருளியல் மன்றத்தின் ஒரு பகுதியாக இன்று(01.02.26) ஒளிபரப்பப்பட்ட பேட்டியில் அவர் இதனை கூறினார். அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவின் நன்மைகளை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு தேவையான மின்னிலக்க உள்கட்டமைப்பு வசதிகள் சிங்கப்பூரில் ஏற்கெனவே உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவை ஒரு அச்சுறுத்தலாக அல்ல, ஒரு நேர்மறையான சவாலாக நாடுகள் பார்க்க வேண்டும் என வலியுறுத்திய திரு தர்மன், மனித மூலதனத்தில் முதலீடு செய்வதன் மூலம் பெரிய வளர்ச்சியை அடைய முடியும் என்றார். தொழில்துறை கொள்கைகளை முன்கணிப்பதைவிட, மக்களின் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊழியரணியின் அனைத்து நிலைகளிலும் செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் சென்றடைய வேண்டும் என்பதே உண்மையான சவால் எனக் கூறிய அவர், அலுவலக ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து செயல்படுவதற்கும், சுகாதாரம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் திறன் மேம்பாடு அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
தொடர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், சிங்கப்பூர் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கத்தைத் தொடங்கியதை நினைவூட்டிய அவர், இது நாட்டின் பொருளியல் சிந்தனையின் ஒரு பகுதியாகவே உள்ளது என்றார். உலகளவில், செயற்கை நுண்ணறிவின் நன்மைகளை அதிகரித்து அதன் அபாயங்களை கட்டுப்படுத்தும் உலகளாவிய நிர்வாகத்தில் போதிய தயாரிப்பு இல்லை என்றும் திரு தர்மன் எச்சரித்தார். செயற்கை நுண்ணறிவால் தூண்டப்படும் அணுவாயுதப் போர், பொய்த் தகவல்கள் மற்றும் இணையக் குற்றங்கள் போன்றவை முக்கிய அபாயங்களாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், செயற்கை நுண்ணறிவில் அடிப்படை ஆய்வு முதல் மருத்துவம் மற்றும் இயந்திரவியல் வரை பல துறைகளில் பல்வேறு போட்டிகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா அல்லது சீனா தனிப்பட்ட முறையில் முழுமையாக வெற்றி பெற முடியாது என்பதால், போட்டியுடனும் ஒத்துழைப்புடனும் கூடிய கட்டமைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.