சிங்கப்பூர்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வீட்டோ முறையை கட்டுப்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை மேம்படுத்தவும் சிங்கப்பூர் வலியுறுத்தியுள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையில் பேசிய சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், உலகின் தற்போதைய சூழ்நிலைகளை பிரதிபலிக்கக்கூடிய, சீர்திருத்தம் செய்யப்பட்ட ஐ.நா. தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா. ஐ.நா. சாசனத்தின்படி, நடைமுறை அல்லாத விஷயங்களில் வாக்களிக்கும்போது, ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் யாராவது ஒரு வரைவுத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தால், பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டாலும், வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்படாது.
உலகின் அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்க்க, பரந்த அளவிலான உறுப்பு நாடுகள் முன்முயற்சி எடுக்கக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பாதுகாப்பு கவுன்சிலும் பொதுச் சபையும் இடையேயான உறவை வலுப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து நாடுகளுக்கும் அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.