லிட்டில் இந்தியாவில் கலைக்கட்டும் பொங்கல் திருவிழா..!!!
சிங்கப்பூர்:லிட்டில் இந்தியாவில் இன்று(10.01.26) பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஒளியூட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு,சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் மற்றும் இந்திய சமூகத்தினரிடையே விழாக்கோலத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் ஒளியூட்டின் ஒரு பகுதியாக, சிராங்கூன் சாலை முழுவதும் இன்று மாலை 7.30 மணிக்கு அலங்கார விளக்குகள் ஏற்றப்படவுள்ளன.பாரம்பரியமும் நவீனத்தன்மையும் கலந்த ஒளி அலங்காரங்கள் லிட்டில் இந்தியா பகுதியை விழாக்கோலமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒளியூட்டு விழாவைச் சிறப்பிக்க பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக,லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் (LITAS) தெரிவித்துள்ளது.இதில் பாரம்பரிய இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
பொங்கல் விழா ஏற்பாட்டுக்குழுத் தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், இவ்வாண்டு நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் கடந்த ஆண்டுகளை விட அதிகமான உள்ளூர்க் கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். இது உள்ளூர் கலைஞர்களுக்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும்,பொங்கல் பண்டிகையின் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் பிற இன மக்களும் அறிந்துகொள்ளும் வகையில், கூட்டுப் பொங்கல் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, பல்வேறு சமூகங்களுக்கிடையிலான புரிதலையும் ஒற்றுமையையும் வளர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.
லிட்டில் இந்தியாவில் இன்று நடைபெறவுள்ள இந்த பொங்கல் ஒளியூட்டு விழா, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சமூக ஒற்றுமையை பிரதிபலிக்கும் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.