தீய பழக்கத்தில் சிக்கிய இளைஞரின் மறுவாழ்வு கதை..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மோசமான சகவாசத்தின் காரணமாக தவறான பாதையில் சென்ற இளைஞன் ஒருவன், போலீசார் நடத்திய விசாரணைக்குப் பிறகு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்ட சம்பவம் சமூக கவனத்தை பெற்றுள்ளது.
ஜாம்பி கருப்பொருள் கொண்ட இ-சிகரெட் தோட்டாக்கள் தொடர்பான இந்த வழக்கு, அந்த இளைஞனின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த வழக்கின் மையமாக உள்ளவர் 17 வயதான வெய் கியாங் (புனைப்பெயர்). கடந்த செப்டம்பரில், மூன்று நண்பர்களுடன் வெளியே சென்றிருந்த போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அந்த குழுவில் 14 வயதான சிறுமியும் இருந்ததாகவும், பெற்றோருக்குத் தெரியாமல் வெளியே சென்றிருந்த அவரை தொடர்பு கொள்ள முடியாததால், சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அந்த குழு தங்கியிருந்த ஹோட்டலில் தேடுதல் நடத்தப்பட்டது. அப்போது, வெய் கியாஙின் பையில் ஜாம்பி கருப்பொருள் கொண்ட இ-சிகரெட் தோட்டாக்களும் ஒரு மின்-சிகரெட்டும் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆரம்பத்தில் அந்தப் பொருட்கள் தனக்குச் சொந்தமானவை அல்ல என்றும், அவை எவ்வாறு பையில் வந்தன என்பது தெரியாது என்றும் அவர் கூறினார்.ஆனால் விசாரணையின் போது, அந்த ஜாம்பி இ-சிகரெட் தோட்டாக்களை இரண்டு முறை பயன்படுத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் இளைஞர் மேம்பாட்டு மேற்பார்வை திட்டத்தின் கீழ் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்பு, வெய் கியாங் மோசமான செல்வாக்குடைய நண்பர்களுடன் பழகி, தாமதமாக விழித்திருப்பது,இரவு நேரங்களில் பார்கள் மற்றும் விடுதிகளுக்குள் செல்வது போன்ற பழக்கங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டது தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமான விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும், அது ஒரு பாடமாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.மறுவாழ்வு காலத்தில், தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது, சரியான முடிவுகளை எடுப்பது மற்றும் வாழ்க்கையை பொறுப்புடன் அணுகுவது போன்றவற்றை கற்றுக்கொண்டதாக வெய் கியாங் தெரிவித்தார்.
பழைய நண்பர்கள் வட்டத்தை விட்டு விலகி, தற்போது பொறுப்புள்ள மற்றும் முதிர்ந்த நண்பர்களுடன் பழகத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார். இப்போது, படிப்பில் கவனம் செலுத்தி, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதே தனது இலக்கு என்றும், கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய விரும்பவில்லை என்றும் வெய் கியாங் கூறியுள்ளார்.
இந்த சம்பவம், தவறான சகவாசம் இளைஞர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்க முடியும் என்பதையும், சரியான வழிகாட்டலும் மறுவாழ்வும் வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.