ஹாட் யாய் வெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிர்ச்சி அனுபவம்..!!!
தாய்லாந்தின் ஹாட் யாய் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கித் தவித்த பத்து பேர் கொண்ட சிங்கப்பூர் குடும்பம் ஒன்று நேற்று(28.11.25) பாதுகாப்பாக வீடு திரும்பியது.பல நாட்கள் மின்சாரம், தண்ணீர், தகவல் தொடர்பு இல்லாமல், உணவு பற்றாக்குறையால் துயரத்தில் தவித்த அவர்கள், தற்போது சிங்கப்பூரில் குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளனர்.
74 வயதான ஜுவோ டிங்செங், கடந்த வாரம் ஒன்பது உறவினர்களுடன் மலேசியாவின் பினாங்கு மற்றும் தாய்லாந்தின் ஹாட் யாய் பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.ஆனால் 22 ஆம் தேதி தொடங்கிய திடீர் வெள்ளம் காரணமாக, அவர்கள் ஹோட்டலில் சிக்கிக் கொண்டனர்.
அந்தக் குழுவில் பெரும்பாலானோர் 61 முதல் 81 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் சிலர் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். மின்சாரம், சிக்னல் இல்லாததால், அவர்கள் இரண்டு நாட்கள் வெளி உலகத்துடன் தொடர்பை இழந்தனர்.
சுற்றுலா பயணியான ஜுவோ டிங்செங் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, ஐந்து மணி நேரம் தடுப்புச் சுவரில் சிக்கியிருந்தார். பின்னர் தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் மிதக்கும் சாதனம் மூலம் அவரை மீட்டார். அவர் இரண்டு நாட்கள் உள்ளூர் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
ஹோட்டலில் இருந்த மற்ற ஒன்பது பேர், ஹெலிகாப்டர் மூலம் அளிக்கப்பட்ட உலர் உணவுகளால் உயிர் பிழைத்தனர். அவர்களுக்கு ஒரே ஒரு பிஸ்கட் இருந்தால் கூட அனைவரும் பகிர்ந்து கொண்டதாக ஜுவோ டிங்செஙின் மனைவி சென் சுஹுவா தெரிவித்தார்.
வெள்ளம் குறைந்த பிறகு, அவர்கள் ஒன்பது மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஹாட் யாய் விமான நிலையத்தை அடைந்தனர். சிலர் தாய் இராணுவ வாகனங்களில், சிலர் வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்த வாகனங்களில் விமான நிலையத்தை அடைந்தனர்.
அவர்கள் இறுதியில் ஸ்கூட் விமானம் மூலம் சிங்கப்பூருக்கு திரும்பினர். விமான நிலையத்தில் குடும்பத்துடன் மீண்டும் இணைந்த சென் சுஹுவா கண்ணீர் மல்க “நான் சிங்கப்பூரை நேசிக்கிறேன்” என்று கூறினார்.
ஜுவோ டிங்செங் தங்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தாய் அரசாங்கம், உள்ளூர் மக்கள் மற்றும் சிங்கப்பூர் அரசாங்கம் அளித்த உதவிக்கு நன்றி தெரிவித்தார்.