மாமாவை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற மருமகனின் தில்லாலங்கடி வேலை.!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இன்று (14.02.26) நீதிமன்றத்தில் 22 வயது வங்கதேச நபர் ஒருவர்மீது, கப்பம் பெறும் நோக்கில் கடத்தலைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிப்ரவரி 12 காலை 11:42 மணியளவில் அந்த நபர் வேலைக்குச் செல்லாதது குறித்து புகார் பெறப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. காணாமல் போனவர் தொடர்பான புகாரைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மறுநாள் (13.02.16) அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் அதிகாரிகளுக்குக் கிடைத்தது.
மாமாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகவும், பிணையில் இருப்பதாகக் கூறப்பட்ட நபரின் புகைப்படமும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கிளெமென்டி காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விரைந்து தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கினர். கடத்தல் குறித்த தகவல் கிடைத்த மூன்று மணி நேரத்திற்குள், மெரினா விரிகுடா பகுதியில் அந்த நபர் காயமின்றி கண்டுபிடிக்கப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ‘கடத்தல் நாடகம்’ திட்டமிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் யாரும் கப்பம் செலுத்தவில்லை என்றும், விசாரணைக்காக சந்தேக நபரின் கைப்பேசி மற்றும் பிற சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏமாற்ற முயற்சி செய்ததாக அந்த நபர் மீது பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.