சிங்கப்பூரில் இரண்டு வாரங்களில் 10 வாகனங்கள் பறிமுதல்..!! காரணம்..??
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சட்டவிரோத எல்லை தாண்டிய பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மேலும் 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் சன் சூலிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரை, அமலாக்க அமைப்புகள் 3,100க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சோதனை செய்துள்ளன. இதில், சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்ட 172 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சந்திர புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், எல்லை தாண்டிய பயண தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இதை பயன்படுத்தி சட்டவிரோத சேவைகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார். எனவே பயணிகள் கட்டாயம் சட்டப்பூர்வமான எல்லை தாண்டிய போக்குவரத்து சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
பயணிகளின் பாதுகாப்பு, அதே நேரத்தில் உள்ளூர் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது அரசின் முதன்மை முன்னுரிமை என்றும் சன் சூலிங் தெளிவுபடுத்தினார். சட்டவிரோத எல்லை தாண்டிய பயண சேவைகள் குறித்து சந்தேகம் இருப்பின், பொதுமக்கள் go.gov.sg/report-illegal-rides என்ற இணையதளத்தின் மூலம் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.