குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று (மார்ச் 28) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் நிரந்தர இருப்பிட விண்ணப்பத்திற்காக பணம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு போலியான கடிதம் வந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
அதில் ஒரு நபரிடம் நிரந்தர இருப்பிடக் கட்டணமாக $5000 வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
நிரந்தர இருப்பிட விண்ணப்பப் படிவத்தில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் சின்னம் மற்றும் அதிகாரிகளின் கையொப்பங்கள் ஆகியவை போலியாக அச்சிடப்பட்ட கடிதங்களை அந்த நபர் பெற்றுள்ளார்.
அந்த நபரின் பெயரில் எந்த ஒரு விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், எந்த ஒரு கடிதங்களையும் அதிகாரிகள் வழங்கப்படவில்லை எனவும் ICA தெளிவுபடுத்தியுள்ளனர்.
சிங்கப்பூரில் நிரந்தர மற்றும் நீண்ட கால குடியுரிமைப் பெறுவதற்காக, தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆலோசகர்கள் உதவி வருவதாக ICA குறிப்பிட்டுள்ளது.இது போன்ற எந்தவொரு சேவைகளையும் தாங்கள் ஆதரிக்கவோ அல்லது அங்கீகரிக்கவோ இல்லை என்று கூறியுள்ளது.
மேலும் தொழில் நிறுவனங்களையோ அல்லது ஆலோசர்களையோ நாடும் விண்ணப்பதாரர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுமக்கள் அவர்களது விண்ணப்பங்களை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலமாகவே சமர்பிக்க வேண்டும் எனவும், அதனால் நிரந்தர இருப்பிடமானது விரைவில் கிடைத்து விடும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இது குறித்த உதவி தேவைப்படுபவர்கள் இணைய வழிப் படிவங்கள் அல்லது 6391-6100 என்ற எண்ணிற்கு அழைத்து உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.