ஹ்வா சோங் உணவுப் பெட்டி சர்ச்சை..!! பள்ளி நிர்வாகம் கொடுத்த விளக்கம்..!!
சிங்கப்பூர்: ஹ்வா சோங் நிறுவனத்தில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட மதிய உணவுப் பெட்டிகள் தொடர்பான சர்ச்சை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. தங்களை அந்தப் பள்ளி மாணவர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர்,உணவுப் பெட்டிகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஒன்பது மாணவர்களுக்கு பின்னர் ஒழுங்குமுறை புள்ளிகள் கழிக்கப்பட்டதாக ரெடிட்டில் பதிவு செய்தனர்.
இந்த குற்றச்சாட்டுகள் மாணவர்களின் கல்வி மற்றும் கூடுதல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறினர்.
ஆனால், ஹ்வா சோங் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததற்காக எந்த மாணவருக்கும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், மாணவர்களின் கருத்துகளை பள்ளி மதிப்பதாகவும் நிர்வாகம் தெரிவித்தது.
மேலும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட உணவுப் பெட்டிகள் தொடர்பான புகைப்படங்கள் உண்மையான அளவையோ விநியோகத்தையோ முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்றும் பள்ளி விளக்கம் அளித்தது.
இதற்கிடையில், உணவுப் பெட்டிகளின் விலை உயர்வு, உணவின் அளவு மற்றும் தரம் குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சில பள்ளிகளில் முன்பதிவு முறையில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாகவும், உணவு வழங்கலில் சிக்கல்கள் இருந்ததாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட உணவு சப்ளையர்கள், இது புதிய செயல்முறை என்பதால் ஆரம்ப கட்ட சிக்கல்கள் இருப்பதாகவும், அவற்றை சரிசெய்ய பள்ளிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளனர்.