சாலையில் அலட்சியம்..?? கனரக வாகன ஓட்டுநர்கள் மீது வழக்கு.!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கனரக வாகனங்களை வேகமாக ஓட்டியதாகக் கூறப்படும் 11 ஆண் ஓட்டுநர்கள் மீது இன்று (27.01.26) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது. இந்த ஓட்டுநர்களின் வயது 29 முதல் 60 வரை இருப்பதாக சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது.
காவல் துறையின் அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் ஓட்டிய கனரக வாகனங்களில் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டிய வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் இல்லை அல்லது அவை சரியாக செயல்படவில்லை. இதனால், அந்த வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறி ஓடியது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நிகழ்ந்தவை. பான் தீவு விரைவுச்சாலை, புக்கிட் திமா விரைவுச்சாலை, தெம்பனிஸ் விரைவுச்சாலை மற்றும் பேட்லி சாலை ஆகிய இடங்களில் இந்த மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல் முறையாக குற்றம் செய்தவர்களுக்கு அதிகபட்சமாக S$1,000 அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் செய்தவர்களுக்கு S$2,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். சிலரின் ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
தற்போதைய சட்ட விதிமுறைகளின்படி, அதிகபட்சமாக 12,000 கிலோவிற்கு மேல் சுமை ஏற்றும் கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். வேகமாகச் சென்றதாக கண்டறியப்படும் வாகனங்கள், அந்த கருவிகள் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய கட்டாய ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்படும்.
மேலும், ஜனவரி 1, 2018க்கு முன் பதிவு செய்யப்பட்டு 5,001 முதல் 12,000 கிலோ வரை சுமை திறன் கொண்ட லாரிகள், இந்த ஆண்டு ஜனவரி 1க்குள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை நிறுவ வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, 3,501 முதல் 5,000 கிலோ வரை சுமை திறன் கொண்ட லாரிகளுக்கான சட்டப்பூர்வ காலக்கெடு இந்த ஆண்டு ஜூலை 1 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.