சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மலேசிய நபர்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அரசு அதிகாரியாக வேடமிட்டு பல மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 36 வயது மலேசிய ஆடவர் மீது, ஜனவரி 28ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், சிங்கப்பூர்க் காவல்துறையின் மோசடி ஒழிப்புப் பிரிவு விசாரணை மேற்கொண்டது.
இவ்வழக்கின் விசாரணை, இந்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. அவர், சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரிகள் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட சிலரிடம், S$12,000க்கும் அதிகமான ரொக்கத் தொகையையும், விலையுயர்ந்த பொருட்களையும் இழந்ததாக புகாரளித்தார்.
அந்தப் பெண்ணை பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பொய்யாகக் குற்றம் சாட்டிய மோசடி கும்பல், விசாரணைக்காக அவரது பணத்தையும் மதிப்புமிக்க பொருட்களையும் ஒப்படைக்குமாறு மிரட்டியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஜனவரி 26ஆம் தேதி சந்தேக நபரை அதிகாரிகள் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது, மற்றொரு பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமான விலைமதிப்பற்ற பொருட்களும் அந்த நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது S$5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், கடந்த டிசம்பர் மாத இறுதியில் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகளின் கீழ், குறைந்தது ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அரசு அதிகாரிகள் ஒருபோதும் தொலைபேசி வழியாக பணம் கேட்க மாட்டார்கள் என்றும், அதிகாரபூர்வமற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்த மாட்டார்கள் என்றும் காவல்துறை பொதுமக்களுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.