போலீசாரின் கடமைக்கு இடையூறு..! டிரைவர் மீது கடும் குற்றச்சாட்டுகள்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் ஒருவர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் உரிமம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகள் இன்று(10.02.26) சுமத்தப்பட உள்ளன.
நேற்று முன்தினம் (08.02.26) அதிகாலை 1:50 மணியளவில் கோல்மன் தெரு பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினர் வழக்கமான சோதனைக்காக அந்த நபரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அவர் அதனை உதாசீனப்படுத்தி, ஆபத்தான முறையில் வேகமாக வாகனம் ஓட்டிச் சென்றதாக காவல்துறை தெரிவித்தது.
அதன்பின், அந்த நபர் போக்குவரத்திற்கு எதிர்திசையில் வாகனம் ஓட்டி, ஒரு டாக்ஸியில் மோதியதாகவும், பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பின்னர் அந்த வாகனம் சென்ட்ரல் பவுல்வர்ட் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்திற்குள் இருந்து சந்தேகிக்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்களை காவல்துறையினர் மீட்டனர்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் விரிவான விசாரணையின் அடிப்படையில், மத்திய காவல் நிலையமும் போக்குவரத்து காவல்துறையும் இணைந்து அதே நாளில் அந்த நபரை கைது செய்தன.
மேலும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் பாதசாரிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
கைதான ஓட்டுநரிடம் போக்குவரத்து தொடர்பான பிற குற்றங்கள் மற்றும் போதை பொருள் தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரணை நடைபெற்ற வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.