MRT நிலையங்களில் குழந்தைகளை ஒப்படைப்பது சரியா..??அதிகரிக்கும் சர்ச்சைக்கு LTA விளக்கம்..!!
சிங்கப்பூர்: MRT நிலையங்களில் குழந்தைகளை ஒப்படைப்பது தொடர்பான சர்ச்சை தற்போது சமூக ஊடகங்களில் அதிகரித்து வருவதால் அதற்கு நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) விதிமுறைகளை தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த சர்ச்சை டேனியல் செள என்ற தந்தை, போக்குவரத்து அமைச்சர் செஃப்ரி சியாவ் அவர்களுக்கு எழுதிய திறந்த கடிதத்தின் மூலம் இணையத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.
LTA சமூக ஊடகங்களில் நேற்று (ஜூன் 12) வெளியிட்ட முக்கிய விவரங்கள் பின்வருமாறு: 👉சுரங்கபாதை நிலையங்களின் பாதுகாப்பு நியாயத்தன்மை மற்றும் வசதிக்காகவே விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பொது போக்குவரத்து ஊழியர்கள் இவற்றை எப்போதும் இரக்கத்துடனும், நெகிகழ்வுத் தன்மையுடன் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
👉ரயில்களில் உணவு உண்ண தடை இருந்தாலும், குழந்தைகள் அல்லது முதியவர்களின் மருத்துவ தேவைக்காக ஊழியர்கள் அனுமதிப்பது போல, இத்தகைய அவசர குழந்தை மாற்றங்களுக்கும் ஊழியர் பக்கவாட்டு வாசலை (Side Gate) திறந்து உதவலாம் எனவும் LTA அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
👉இந்த சர்ச்சைக்குரிய சம்பவத்தில், தந்தை சமூக ஊடகங்களில் பதிவிட்ட பிறகு அவரிடம் நேரடியாக பேசி SMRT விளக்கம் அளிக்க முயன்றுள்ளது. ஆனால் அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை என்பதை LTA சுட்டி காட்டியுள்ளது. மேலும் தங்களது ஊழியர்கள் அவருக்கு உதவ மறுத்ததாக கூறுவது என்பது தவறானது என்பதையும் அதில் பதிவிட்டிருந்தது.
இந்த சர்ச்சையில் சம்பந்தப்பட்ட தந்தை, தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் லைன் ரயில் நிலையத்தின் கட்டண பகுதிக்குள் இருந்தபடி, தனது குழந்தையை அவசரத்திற்காக தனது மாமியார் வீட்டினரிடம் ஒப்படைக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு நிலைய மேலாளர் அவரை கார்டை தேய்த்து வெளியேறி குழந்தையை கொடுத்து விட்டு, மீண்டும் உள்ளே வருமாறு வலையுறுத்தியதால், அவருக்கு $2 கட்டணம் வீணாகியுள்ளதாக நினைத்துள்ளார்.
இத்தகைய கூடுதல் கட்டணங்களை தவிர்ப்பதற்காக 7 வயதிற்கு உட்பட்ட மற்றும் தகுதியுடைய குழந்தைகளுக்கு இலவச குழந்தை சலுகை அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் LTA நினைவூட்டியுள்ளது.
இந்த அட்டையைப் பயன்படுத்தி குழந்தையை மட்டுமே கட்டண வாயில் வழியாக கார்டு தேய்த்து இலவசமாக வெளியில் அனுப்ப முடியும். இதனால் பெற்றோர் வெளியேற தேவையில்லை என்பதையும் விளக்கி உள்ளது.
பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் பொது போக்குவரத்து பயணங்களின் போது ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் நிலைய அதிகாரிகளை அணுகலாம் என்று SMRT மற்றும் LTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.