புத்தாண்டை வரவேற்க சைனா டவுனில் திரண்ட மக்கள்…!!!

புத்தாண்டை வரவேற்க சைனா டவுனில் திரண்ட மக்கள்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் அமைந்துள்ள சைனாடவுன் சதுக்க வளாகத்தில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு கவுண்டவுன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. குதிரை ஆண்டை வரவேற்க “நல்ல அதிர்ஷ்டத்தை” குறிக்கும் வகையில் 66 பட்டாசுகள் வெடிக்கப்பட்டது விழாவின் முக்கிய அம்சமாக அமைந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அந்த கண்கவர் தருணத்தை கண்டு களித்தனர்.

நேற்று(16.02.26) இரவு 10.30 மணியளவில் கவுண்டவுன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடக்கம் முதலே மேடை நிகழ்ச்சிகள் பரபரப்பாக நடைபெற்று, பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய கலை நிகழ்வுகள் என முழு விழாவும் பண்டிகை நிறத்தில் மிளிர்ந்தது.

பாம்பு நடனம் மற்றும் சிங்க நடனம், தற்காப்புக் கலைகள், சீன பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மேடையில் காட்சியளித்தன. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பார்வையாளர்களின் கைதட்டலும் ஆரவாரமும் இடைவிடாது ஒலித்தது. விழா முழுவதும் ஒரு உற்சாகமான பண்டிகை சூழல் நிலவியது.

ஜாலான் பெசார் குழுத் தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் — டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் அமைச்சர் ஜோசபின் தியோ, மத்திய மாவட்ட மேயர் பான் லி பிங், டாக்டர் பூன் லாய் காய் மற்றும் லோ ஷோ என் — மேலும் போடோங் பாசிர் ஒற்றை உறுப்பினர் தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் யாங் ஷெங் காய் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பொதுமக்களுடன் இணைந்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நள்ளிரவு மணிகள் ஒலித்தவுடன், 66 பட்டாசுகள் வானில் முழங்கி பிரகாசமான ஒளிக் காட்சியுடன் நெருப்பு குதிரை ஆண்டை வரவேற்றன. சைனாடவுன் சதுக்கம் முழுவதும் அதிர்ந்த அந்த தருணம், புதிய ஆண்டின் நம்பிக்கை மற்றும் வளம் நிறைந்த தொடக்கமாக மக்களின் மனதில் பதிந்தது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK