பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பணம் தரும் இயந்திரம் வந்தாச்சு..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பானக் கொள்கலன் திரும்பும் திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக, பாசிர் ரிஸ், பொங்கோல் மற்றும் ஜாலான் துன் டாக்டர், ஜாலான் தியோங் பாரு போன்ற பகுதிகளில் பான பாட்டில் மற்றும் கேன் மறுசுழற்சி இயந்திரங்களின் முதல் தொகுதி நேற்று(23.02.26) நிறுவப்பட்டது.
பான பாட்டில் மற்றும் கேன் மறுசுழற்சிக்குப் பொறுப்பான இலாப நோக்கற்ற நிறுவனமான BCRS மேற்கண்ட பகுதிகள் உட்பட சிங்கப்பூரின் பல இடங்களில் முதல் கட்ட இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று மாலை சமூக வலைதளத்தில் அந்த நிறுவனம் ஒரு காணொளியையும் பகிர்ந்துள்ளது.மறுசுழற்சி மையங்கள் தீவு முழுவதும் பெரிய பல்பொருள் அங்காடிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
பணத்தைத் திரும்பப் பெறும் முறை முழுமையாக அமலுக்கு வருவதற்கு முன் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த உபகரணங்களை பொறுப்புடன் கையாளுமாறு பொதுமக்களுக்கு நிறுவனம் நினைவூட்டியுள்ளது.
அடுத்த சில வாரங்களில், இந்த இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த படிப்படியான வழிகாட்டுதலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு திட்டமும் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, தீவு முழுவதும் சுமார் 1,000 மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்படும்.
அவை முக்கிய பல்பொருள் அங்காடிகள் மற்றும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பகிர்ந்து வைக்கப்படும். இதனால், சுமார் 90 சதவீத வீடமைப்பு வளர்ச்சி வாரிய குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஐந்து நிமிட நடைப்பயணத்தில் மறுசுழற்சி மையத்தை அடைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.