நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!!
நியூயார்க் நகரத்தின் வால் தெருவில் ஒரு ஹைபிரிட் வாகனம் தீப்பிடித்து திடீரென வெடித்துள்ளது. அதில் ஒரு மாபெரும் நெருப்பு பந்து உருவானது. அதனைக் கண்ட மக்கள் அலறி அடித்து தப்பி ஓடி உள்ளனர்.
மே 19ஆம் தேதி அன்று மாலை 5:42 மணியளவில் நியூயார்க் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின்( MTA) தலைமையகத்திற்கு வெளியே இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது.
மன்ஹாட்டனின் நிதி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சார்ஜிங் புல்லிலியில் இருந்து ஒரு தெரு தொலைவில் இந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது.
அந்த வாகனம் திடீரென வெடித்ததில் உடனடியாக ஒரு பெரிய தீப்பிழம்பு உருவாகியுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த மக்கள் அதனைக் கண்டு பீதி அடைந்து தப்பி ஓடும் காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
நியூயார்க் நகர தீயணைப்பு துறை தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் ஆனதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீப்பிடித்த வாகனம் தங்களது நிறுவனத்திற்கு சொந்தமானது என பெரு நகர போக்குவரத்து ஆணையம் (MTA) தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்த விசாரணையை நியூயார்க் நகர தீயணைப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் MTA கூறியுள்ளது.
இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான காரணங்கள் எதுவும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை எனவும், ஆனால் தீ விபத்திற்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து குறித்த காணொளிகள் இணையத்தில் பரவி இணையவாசிகளிடமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.