உருகும் சாலைகள்..!! தாங்க முடியாத வெப்பம்..!! ஐரோப்பாவை உலுக்கும் காலநிலை மாற்றம்..!!

உருகும் சாலைகள்..!! தாங்க முடியாத வெப்பம்..!! ஐரோப்பாவை உலுக்கும் காலநிலை மாற்றம்..!!

பனி பொழியும் ரம்மியமான குளிர்ச்சியான சூழலை கொண்ட ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் சமீபத்தில் வரலாறு காணாத வெப்ப அலை தாக்கியது.

பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஏற்பட்ட இந்த வெப்ப அலையை தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

சாலைகள் உருகி வழிவது, கார்களின் பிளாஸ்டிக் பாகங்கள் விரிவடைந்து நொறுங்குவதையும் அவர்கள் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை.

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட பருவ கால தட்பவெப்ப மாற்று நிகழ்வான எல்நினோ பாதிப்புதான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் புவி வெப்பமயமாதல் காரணமாக ஆர்டிக் பகுதியில் பனி மலைகள் வேகமாக உருகி வருவதும் இந்த வெப்ப அலை ஏற்பட முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் தற்போது கூறியுள்ளனர்.

பொதுவாக ஆர்டிக் பிரதேசத்தில் பனி வெள்ளை நிறமாக இருப்பதால் சூரிய ஒளியை விண்வெளிக்கு பிரதிபலிக்கிறது. சூரிய வெப்பம் காரணமாக பனி உருகிய பிறகு பனிமறைந்த அந்த இடத்தில் கருமையான கடல் மற்றும் நிலம் வெளிப்படும்.

இதை அதிக சூரிய வெப்பத்தை உறிஞ்சி மேலும் வெப்பத்தை அதிகரிக்கின்றன. இதனால் மீண்டும் அதிக பணி உருகும் செயல்முறை தொடர்ந்து நிகழ்கிறது.

இதன் விளைவாகத்தான் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்ப அலைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெப்ப அலைகளுடன் எல் நினோ பாதிப்பும் சேரும்போது காட்டுத்தீ அபாயம் அதிகரிப்பு, கடும் வறட்சி, விவசாய உற்பத்தி குறைவு, கடல்மட்ட உயர்வு என்று ஏராளமான பாதிப்புகள் உருவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பூமியை குளிர்வித்தால் மட்டுமே இந்த வெப்ப அலைகள் கட்டுக்குள் வரும் என்று விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.