சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி..!! 100 பேர் கைது..!!
சிங்கப்பூர் மத்திய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) நாடு தழுவிய அளவில் நடத்திய தீவிர சோதனையில் 100 போதைப் பொருள் சந்தேக நபர்களைக் கைது செய்து $34,000க்கும் அதிகமான மதிப்புடைய போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது.
இந்த சோதனை கடந்த ஜூலை 12 முதல் ஜூலை 17ஆம் தேதி வரையிலான 6 நாட்களில் மேற்கொள்ளப்பட்டது.
பூன் லே, கிம்மோ, ஜூரோங், காலாங், தெம்பெனிஸ், தெங்கா, தோ பாயோ, மற்றும் உட்லண்ட்ஸ் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய வட்டாரங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 859 கிராம் கஞ்சா, 120 கிராம் ஹெராயின், 85 கிராம் ஐஸ் (Methamphetamine), 3 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள், எரிமின்-5 2 மாத்திரைகள் மற்றும் போதைப் பொருள் புழக்கத்திலிருந்து கைமாறிய $252.75 ரொக்கப் பணம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் அளவு, சுமார் 228 போதைப் பொருள் நுகர்வோரின் ஒரு வார தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியது என்று CNB தெரிவித்துள்ளது.
ஜூலை 14ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் மற்றும் செகார் ரோடு பகுதியில் உள்ள 28 வயது நபர் ஒருவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 689 கிராம் கஞ்சா மற்றும் 9 கிராம் ஐஸ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும் ஜூலை 16ஆம் தேதி அன்று ஜுரோங் பகுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் மனிதவள அமைச்சு (MOM) மற்றும் சிங்கப்பூர் சுங்கத்துறை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனைகள் போதைப் பொருள் கடத்தல் மற்றும் நுகர்வுக்காக 9 பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின்படி,0500 கிராமுக்கும் அதிகமான கஞ்சாவை கடத்துபவர்களுக்கு நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு கட்டாயமாக மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள 100 பேரிடமும் தீவிர புலன்விசாரணை நடைபெற்று வருவதாக CNB தெரிவித்துள்ளது.